பாராலிம்பிக்ஸ் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அண்மையில் நடந்து முடிந்தது. இதில் 163 நாடுகளுடன் அமீரகமும் கலந்து கொண்டது. ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என அமீரகத்திற்கு 3 பதக்கங்கள் கிடைத்தன. இந்த நிலையில் பாராலிம்பிக்ஸில் பங்கேற்ற வீரர்கள் அனைவரையும் துபாய் வர்த்தக மையத்தில் அமீரக துணை தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அமீரகம் வென்ற பதக்கங்களை பார்வையிட்டு அதனை வென்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய அவர், பாராலிம்பிக்ஸில் பங்கேற்ற வீரர்களின் சாதனையை கண்டு அமீரகம் பெருமைகொள்வதாக புகழாரம் சூட்டினார். பல தடைகளை வென்று சர்வதேச அரங்கில் திறமையை வெளிக்கொண்டு வந்த நிரூபித்த அனைவரும் சாதிக்க நினைப்பவர்களுக்கு ஓர் மிகச்சிறந்த உந்துசக்தி என குறிப்பிட்டார். தொடர்ந்து பல பதக்கங்களை வெல்லவும் வீரர்களுக்கு துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வாழ்த்து தெரிவித்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் பாராலிம்பிக்ஸ் வீரர்களுடன் துபாய் ஆட்சியாளர் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு விடைபெற்றார்.
