UAE Tamil Web

“3 நாட்களில் எழுதிமுடித்தேன்” – அமீரக தேசிய கீதத்தை எழுதிய டாக்டர். ஷேக் கூறும் சுவாரஸ்ய தகவல்கள்.!

UAE's national anthem

இன்று அமீரகத்தின் 49 வது தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. அமீரகத்தின் தேசிய கீதமான இஷி பிலேடி ( Ishy Bilady) எனத்துவங்கும் பாடலை எழுதிய டாக்டர். ஆரிப் அல் ஷேக் (Arif Al Shaikh) அவர்களை கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனம் நேர்காணல் செய்துள்ளது. இதில் அமீரக தேசிய கீதத்தை எழுதிய அனுபவத்தை டாக்டர்.ஷேக் பகிர்ந்துகொண்டிருக்கிறார். இனி அவருடைய மொழியிலேயே அவரின் அனுபவங்களைப் பார்க்கலாம்.

- Advertisment -

1986 ஆம் ஆண்டு அமீரக கல்வித்துறை அமைச்சர்  ஹுமைத் அல் தையேர் பள்ளிகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார். அப்போது பள்ளிகளில் அமீரக கொடி ஏற்றப்படுவதையும் அமீரக தேசிய இசை வாசிக்கப்படுவதையும் கவனித்திருக்கிறார். மற்ற நாடுகளைப்போல் தேசிய கீதம் இல்லாமல் இசை மட்டுமே அமீரகத்தில் இருப்பதை மாற்ற அவருக்குத் தோன்றியிருக்கிறது. உடனடியாக அமைச்சகத்தில் உள்ள நூலகத்திற்குச் சென்று தேசிய இசைக்கான தகுந்த வார்த்தைகளைத் தேடியிருக்கிறார்.

அப்போது நான் தேர்வுத்துறையின் தலைமை இயக்குனராக இருந்தேன். என்னிடம் அமீரகத்திற்கான தேசிய கீதத்தை இயற்றுமாறு அமைச்சர் சொல்லும்போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

இரண்டு சவால்கள்

எனக்கு முன்  2 சவால்கள் இருந்தன. முதலாவது, பொதுவாக பாடல் எழுதும்போது, பாடலுக்கான வரிகளை எழுதிய பின்னர் அதற்கான இன்னிசை கோர்க்கப்பட்டு பின்னர் இரண்டும் ஒருங்கிணைக்கப்படும். இங்கோ கதை அப்படியே தலைகீழ். ஏற்கனவே கேட்போரை உருக்கிவிடும் அளவிற்கான மெலடி இசை தயாராக உள்ளது. அதற்கு நான் வரிகளை எழுதவேண்டும்.

இன்னொரு சவால். அமைச்சர் என்னிடம் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் இருப்பதாகத் தெரிவித்தார். நான் மீண்டும் மீண்டும் அந்த இசையைக் கேட்டேன். அதன் நுணுக்கமான இசைத் தெறிப்புகளை அப்படியே எனக்குள் உள்வாங்கிக்கொண்டேன். குடிமக்கள் மற்றும் அமீரக வாழ் வெளிநாட்டு மக்களின் இதயங்களை தொடும் வல்லமை வாய்ந்ததாக வரிகள் இருக்கவேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருந்தேன். அதே திடத்துடன் எழுதத் துவங்கி முடிக்கவும் செய்துவிட்டேன்.

முதல் குரல்

என் வாழ்வின் வழிகாட்டியாகவும், உற்ற துணையாவும் இருக்கும் எனது மனைவிதான் அந்த வரிகளை முதலில் படித்துப் பார்த்தார். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. என்னை ஊக்கப்படுத்திய அவரே என்னை பாராட்டவும் செய்தார்.

நான் அமைச்சகத்தில் பாடலை ஒப்படைத்தேன். இறுதியாக பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டபோது நான் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தேன்.

ரேடியோ துபாய்

நான் எழுதிய பாடலானது ரேடியோ துபாயில் பதிவு செய்யப்பட்டு அமீரகம் முழுவதிலுமுள்ள பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டது. அடுத்த சில நாட்களிலேயே மக்கள் அந்தப் பாடலை முணுமுணுக்கத் தொடங்கினர். எங்கு நோக்கிலும் அந்தப் பாடலைப் பற்றியே பேசினர். மக்கள் ஒன்றுகூடி தேசிய கீதத்தினைப் பாடி மகிழ்ந்தனர். என் வாழ்க்கையில் நான் மறக்கவே முடியாத தருணம் அது.

அமீரகத்தின் தந்தையான ஷேக் சயீத் அவர்களிடம் இந்த பாடலைப் பற்றி பேச ஒருமுறை வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் என்னிடம்,”இப்போது நீங்கள் அமீரகத்தையும் யூனியனையும் என்னைவிட அதிகமாக நேசிக்கத் துவங்கிவிட்டீர்கள்” என்றார்.

நான் அப்போது அடைந்த மகிழ்ச்சிக்கும் பெருமைக்கும் அளவே இல்லை” என டாக்டர்.ஷேக் தெரிவித்தார்.