இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயில நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளி உயர் கல்விக்குப் பிறகு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவோர் மட்டுமே இந்தியாவில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும். இந்த நடைமுறைக்கு தமிழ்நாடு தொடக்கம் முதல் இன்று வரை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நடப்பாண்டில் இளநிலை மருத்துவ படிப்பில் சேருவதற்கு இந்தியாவில் உள்ள 203 தேர்வு மையங்களில் 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், துபாய் வாழ் இந்திய மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வு மையம் குவைத்தை தொடர்ந்து துபாயிலும் அமைக்கப்படும் என இந்திய தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதுவதற்காக துபாயில் இருந்து இந்தியா செல்லும் மாணவர்களின் சிரமத்தை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 12ஆம் தேதி துபாயில் நீட் தேர்வு நடைபெறும் எனவும் விரைவில் தேர்வு மையங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் வரும் ஆகஸ்ட் 8 முதல் 12 ஆம் தேதி வரை தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால் துபாய் வாழ் இந்திய மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீட் தேர்வு நடத்துவதற்கு இந்திய தூதர அதிகாரிகள் இந்திய தேசிய தேர்வு முகமைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் இந்திய கல்வி அமைச்சகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குவைத்தைத் தொடர்ந்து முதல்முறையாக நீட்தேர்வு துபாயில் நடைபெற இருப்பது கவனிக்கத்தக்கது.
