புதிய தொழிலாளர் சட்டங்களின் படி, அமீரகத்தில் தனியார் ஊழியர்களுக்கான விடுப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2, 2022 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்ட புதிய தொழிலாளர் சட்டங்களின் படி, அமீரகத்தில் ஒன்றும் மேற்பட்ட நிறுவனங்களிடம் ஒரே நேரத்தில் ஊழியர்கள் வேலை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அமீரகத்தில் உள்ள தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான வருடாந்திர விடுப்பு விதிகளை வரையறுத்துள்ளது.
தொழிலாளர் உறவுகளை ஒழுங்குபடுத்தும் விதமாக, 2021 ஆம் ஆண்டின் ஃபெடரல் சட்ட எண் 33இன் கீழ், தனியார் துறையில் உள்ள ஊழியர்கள் பகுதி நேரமாகவோ அல்லது தங்களுக்கு ஏற்ற வகையிலோ வேலை செய்யலாம் என கூறப்பட்டது.
பகுதி நேர வேலை, பணியாளர்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிறுவனங்கள் குறிப்பிட்ட மணி நேரம் அல்லது வேலைக்கு திட்டமிடப்பட்ட நாட்களுக்கு வேலை செய்ய அனுமதிக்கிறது.
அமீரக அரசிதழின் படி, தொழிலாளி ஓராண்டு வேலை செய்திருந்தால், ஆண்டுக்கு குறைந்தது 30 நாட்கள் முழு ஊதியத்துடன் வருடாந்திர விடுப்புக்கு தகுதியுடையவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சேவை 6 மாதங்களுக்கு மேல் மற்றும் ஒரு வருடத்திற்கு குறைவாக இருந்தால் மாதத்திற்கு இரண்டு நாட்கள் என்றும் ஆணை குறிப்பிட்டுள்ளது.
பகுதி நேர தொழிலாளி, வேலை செய்யும் நேரத்தை பொறுத்து வருடாந்திர விடுப்புக்கு தகுதியானவர் என்று சட்டம் விளக்குகிறது. அதன் காலம் வேலை ஒப்பந்தத்தில் விதிமுறைகளின்படி தீர்மானிக்கப்படுகிறது.
