UAE Tamil Web

மீண்டும் மிரட்டத் துவங்கிய கொரோனா: அமீரகம் – சவூதி இடையே விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக எதிஹாட் மற்றும் எமிரேட்ஸ் நிறுவனங்கள் அறிவிப்பு..!

Emirates Etihad

கொரோனா பரவல் உலக நாடுகளில் மீண்டும் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து நேற்று சவூதி அரேபியா தனது எல்லைகளை மூடுவதாக அறிவித்தது. இதனையடுத்து அமீரக விமான நிறுவனங்களான எதிஹாட் மற்றும் எமிரேட்ஸ் ஆகியவை அமீரகம் – சவூதி இடையே விமானங்கள் மறு அறிவிப்பு வரும்வரையில் இயக்கப்படாது என அறிவித்திருக்கின்றன.

- Advertisment -

துபாயை மையமாகக்கொண்டு இயங்கும் எமிரேட்ஸ் நிறுவனம் தனது இணையதளத்தில்,” சவூதியின் எல்லைகளை மூடுவதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்திருப்பதை முன்னிட்டு இதுகுறித்த மறுஅறிவிப்பு வரும்வரையில் சவூதிக்கு விமானங்கள் இயக்கப்படாது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இதனால் வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகர்யத்திற்கு வருந்துகிறோம். பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தங்களது பயண முகவர் அல்லது எமிரேட்ஸ் கால் சென்டரை நாடி தங்களுக்கான ரீ-புக்கிங் சேவைகளைப் பெறலாம்” என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் எதிஹாட் நிறுவனமும் அமீரகம் – சவூதி இடையேயான சேவை மறுஅறிவிப்பு வரும்வரையில் நிறுத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் பேசுகையில்,” கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் சவூதி அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கையினால் அமீரகம் – சவூதி இடையிலான சேவைகள் மறு அறிவிப்பு வரும்வரையில் நிறுத்தப்படுகின்றன” எனக் குறிப்பிட்டார்.

“வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே எதிஹாட் நிறுவனத்தின் முதன்மையான கடமை ஆகும். இந்த தற்காலிகத் தடையினால் ஏற்பட்ட அசௌகர்யத்திற்காக வருந்துகிறோம்” என செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

கொரோனா காரணமாக மாதக்கணக்கில் மூடப்பட்டிருந்த எல்லைகளை சவூதி சமீபத்தில்தான் திறந்தது. இருப்பினும் உலக நாடுகளில் குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவும் வேகம் மீண்டும் அதிகரித்திருப்பதால் இந்த முடிவை சவூதி எடுத்திருப்பதாகத் தெரிகிறது.