UAE Tamil Web

துபாயிலிருந்து ஷார்ஜாவிற்கு இனி 9 நிமிடங்களில் செல்லலாம் – RTA வின் அசத்தல் திட்டம்..!

road

துபாயையும் ஷார்ஜாவையும் இணைக்கும் புதிய போக்குவரத்து இணைப்புத் திட்டமானது சனிக்கிழமையன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக துவங்கியுள்ளதாக துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது. இதன்மூலம் இனி துபாயில் இருந்து ஷார்ஜாவிற்கு 9 நிமிடங்களில் பயணிக்கலாம். முன்னதாக பயண நேரம் 25 நிமிடங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அல் கவானீஜ் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் அல் கவானீஜ் மற்றும் ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலைகளின் சந்திப்பில் மூன்று பாதைகள் கொண்ட சுரங்கபாதையுடன் கூடிய சாலைகள் இரு திசைகளிலும் உள்ளன. அதேபோன்று அல் அவிரின் (Al Awir) திசையில் அல் அமர்தி (Al amardi) மற்றும் எமிரேட்ஸ் சாலைகள் (Emirates Road) இணையும் சந்திப்பில் இரண்டு பாதைகள் கொண்ட மேம்பாலமும் இந்த திட்டத்தில் அடங்கும் என RTA கூறியுள்ளது.

இதுகுறித்துப் பேசிய சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் மட்டார் முகமது அல் தயேர்,” துபாய் – ஷார்ஜா இடையேயான இணைப்பை மேம்படுத்த இந்த அல் கவானீஜ் சாலைத் திட்ட மேம்பாடு உதவும். எமிரேட்ஸ் சாலை மற்றும் ஷேக் முகமது பின் சயீத் சாலையை ஏர்போர்ட் ஸ்ட்ரீட் ஆகிவற்றை மேம்படுத்துவதன் மூலம் இது சாத்தியமாகும்” என்றார்.

“இந்தத் திட்டத்தின் மூலமாக எமிரேட்ஸ் சாலை மற்றும் ஷேக் முகமது பின் சயீத் சாலை இடையேயான பயண நேரத்தை 25 நிமிடங்களிலிருந்து 9 நிமிடங்களாக குறைக்க முடியும். அதேபோல, அல் கவானீஜ்-ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலைகள் (அல் கவானீஜ் ரவுண்டானா) ஜங்ஷனில் காத்திருக்கும் நேரம் 330 வினாடிகளில் இருந்து 45 வினாடிகளாக குறைகிறது” என தயேர் தெரிவித்தார்.

“இந்த மேம்பாட்டின் காரணமாக ஜங்க்ஷன் வழியாகச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை ஒருமணி நேரத்திற்கு 8000 த்திலிருந்து 16000 ஆக உயரும். இதனை capacity of the junction என்று அழைக்கிறார்கள். அதேபோல அல் கவானீஜ்-அல் அமர்தி சாலைகள் (Khawaneej-Al Amardi Roads) சந்திக்கும் இடத்தில் காத்திருப்பு நேரமானது பாதியாகக் குறையும்”என தயேர் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக ஷேக் சயீத் பின் ஹம்தான் அல் நஹ்யான் சாலையுடன் அல் கவானீஜ் சாலையின் சந்திப்பில் 680 மீட்டர் நீளமுள்ள ஒவ்வொரு திசையிலும் மூன்று பாதைகள் கொண்ட ஒரு சுரங்கப்பாதை (tunnel) அமைக்கப்பட இருக்கிறது. அல் கவானீஜ் சாலையில் சீரான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதிசெய்ய மேற்பரப்பு சமிக்ஞை செய்யப்பட்ட ஜங்க்ஷன் (surface signalised junction) கட்டப்பட்டுள்ளது.

அதேபோல, அல் கவானீஜ்-அல் அமர்தி சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருக்கும் ரவுண்டானாவை சமிக்ஞை செய்யப்பட்ட சந்திப்பாக (signalized junction) மேம்படுத்துவதும் இத்திட்டத்தில் ஒரு பகுதியாகும். அல் அமர்தி-எமிரேட்ஸ் சாலைகளின் சந்திப்பு ஒவ்வொரு திசையிலும் இரண்டு பாதைகள் கொண்ட மேம்பாலமாக மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், அல் அமர்தி – எமிரேட்ஸ் சாலைகளின் சந்திப்பு அல் அவீரின் திசையில் எமிரேட்ஸ் சாலையில் இருந்து 201 மீட்டர் நீளமுள்ள இரு திசையிலும் இரண்டு வழித்தடங்களின் ஃப்ளைஓவராக மேம்படுத்தப்பட்டுள்ளது.

அல் கவானீஜ் சாலையில் அரேபியன் சென்டருக்கு அருகே நடைபாதை பாலம், அல் கவானீஜ் மற்றும் அல் அமர்தி சாலைகளில் 23 கி.மீ நீளமுள்ள சர்வீஸ் சாலை மற்றும் அல்ஜியர்ஸ் தெருவில் உள்ள மூன்று சந்திப்புகள் சிக்னல் ஜங்ஷனாக மாற்றப்படும் மற்றும் கூடுதல் மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்றுவருவதாக தயேர் குறிப்பிட்டார்.

சாலையோர விளக்குகள், மழைநீர் வடிகால் அமைப்பு, திசை அறிவிப்பு குறியீடுகள், சாலை குறியீடுகள் மற்றும் சாலை பாதுகாப்புக்கான பணிகளும் நடைபெற்றுவருகின்றன என அவர் தெரிவித்தார்.

ஏர்போர்ட் சாலையில் அமைந்துள்ள ரஷீதியா, நாத் அல் ஹமர், மராகேக் மற்றும் காசாபிளாங்கா ஆகிய ஜங்க்ஷங்களின் மேம்பாட்டுப் பணிகள் முடிவடைந்ததை முன்னிட்டே அல் கவானீஜ் சாலை மேம்பாட்டுப் பணிகள் துவங்கியுள்ளன.

இந்தத் திட்டம் போக்குவரத்தை எளிமையாக்கி, காத்திருப்பு நேரத்தைக் குறைத்ததுடன் போக்குவரத்து நெருக்கடியையும் குறைத்தது. இதனைத் தொடர்ந்து ஷேக் முகமது பின் சயீத் சாலைக்கும் எமிரேட்ஸ் சாலைக்கும் இடையில் ஒரு இணைப்பை வழங்கும் திரிபோலி சாலை மேம்பாட்டுத்திட்டம் துவங்கப்பட இருக்கிறது.