COVID-19: துபாயின் மெட்ரோ, டாக்ஸி, டிராம், பேருந்துகளில் பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் – RTA..!

Dubai Road
Image Credit: Khaleej Times

அமீரகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றது. அதில் ஒரு பகுதியாக துபாயில் மெட்ரோ, பேருந்து மற்றும் டாக்ஸிகள் போன்றவற்றை பயன்படுத்துவதற்கான புதிய வழிகாட்டுதல்களை சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) வெளியிட்டுள்ளது.

அதில், மக்கள் குறைந்த அளவு எண்ணிக்கையில் பயணம் செய்வதாலும், மக்கள் பொறுப்புடன் செயல்படுவதன் மூலம் மட்டுமே கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முடியும். ஆகவே அமீரகவாசிகள் அவசர தேவையை தவிர மற்ற நேரத்தில் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்காக எடுக்கப்பட்ட புதிய நடவடிக்கைகள் காரணமாக ஏற்படும் தாமதங்கள் மற்றும் சிரமங்களை தவிர்க்க அலுவலக பயணங்களை முன்கூட்டியே திட்டமிடவும் RTA பரிந்துரைத்துள்ளது.

சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) புதிய விதிமுறைகள் பின்வருமாறு:

  • அனைத்து பயணிகளும் பொது போக்குவரத்து மற்றும் டாக்ஸிகளை பயன்படுத்தும் போது கட்டாயம் முககவசம் (face mask) அணிய வேண்டும்.
  • டாக்ஸி மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் நபர்களுக்கு காய்ச்சல் அல்லது வேறு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்பட்டால் பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
  • டாக்ஸிகளில் அதிகபட்சமாக இரண்டு நபர்களுக்கு மேல் பயணம் செய்யக்கூடாது. மேலும் அவர்கள் காரின் பின் இருக்கையில் மட்டுமே அமர வேண்டும்.
  • மெட்ரோ, டிராம் மற்றும் பேருந்துகளில் பயணிக்கும் போது ஒருவருக்கொருவர் இடையேயான சமூக இடைவெளியை (social distance) கடைப்பிடிக்க வேண்டும். எக்ஸ் (X) என்று குறிக்கப்பட்ட இருக்கைகளில் அமர வேண்டாம்.
  • மெட்ரோ, டிராம் அல்லது பேருந்து சேவைகளில் நின்று கொண்டு பயணிக்க நேர்ந்தால் பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தரையில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்களில் நிற்க வேண்டும்.

பயணிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதை ஈடுசெய்ய கூடுதல் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பு:

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த வார இறுதியில் நாடு தழுவிய கிருமிநாசினி தெளிக்கும் திட்டத்தின் காரணமாக, துபாயில் பொது போக்குவரத்து ஒவ்வொரு நாளும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படாது என்பதையும் நினைவு கொள்ள வேண்டும்.

Loading...