UAE Tamil Web

அமீரக வாழ் தமிழக இளைஞர் இசையில் வெளிவந்த பாடல் – இணையத்தில் வைரல்…!

Kangalai Moodikkondu Song Poster

துபாய் வாழ் தமிழரான ஷஹீது ரஹ்மான் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி தனது புதிய தமிழ் பாடல் ஒன்றினை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அமீரகத்தில் உள்ள தமிழக இளைஞர்களின் உதடுகளில் முணுமுணுக்கப்படும் இந்தப் பாடலுக்கு அவரே இசையமைப்பாளராகவும் தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

காதல்.. பாடல்..

ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியென ஆரம்பித்து, சில்லென்ற வாடைக் காற்றை வீசும் ஏரியாக தொடர்கிறது பாடலின் இசை. அதற்கு இணையாக பாடலின் பின்புலக் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

பேனா மையில் காதலை கலந்திட..

காகிதமாய் அதை நீ உறிஞ்சினாய்..

போன்ற மஹாதிர் முஹம்மதின் பாடல் வரிகள் கவனத்தை இட்டு நிரப்புகின்றன. இணையர்களாக தோன்றும் டியாகோ மேத்தீவ் – ஆயிஷா ஸாஸ் பாடலுக்கு உயிரூட்டியிருக்கிறார்கள்.

அழகிய பின்னணி, மயக்கும் இசை, அசத்தும் காதல் ஜோடி என்னும் குழுவை பூர்த்தி செய்திருக்கிறது ஃபசல் ரஹ்மானின் குரல். துல்லியத்துடனும் கலை நுணுக்கத்துடனும் பாடல் பொலிவு பெற இணை இயக்குனர் சலேஷ் பிள்ளை அளித்திருக்கும் உழைப்பிற்கு சபாஷ் சொல்லலாம்.

இணையத்தில் வைரல்

ஷஹீது ரஹ்மானின் யூடியூப் பக்கத்தில் இந்தப் பாடல் வெளியிட்ட நாள் முதலே பலராலும் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வைரலாகியிருக்கிறது. ஒரு மாதத்திற்குள்ளாகவே இந்தப் பாடலை 29,000 த்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். அமீரக வாழ் தமிழ் மக்களுக்கான ரேடியோவான 89.4 தமிழ் FM லும் இப்பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.

சிறுவயதில் தனது சகோதரர் மூலமாக இசைக்கருவிகள் மீதான காதலில் விழுந்திருக்கிறார் ஷஹீது. பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் அவருக்குள் இருந்த அந்தக் காதல் அப்படியே இன்றும் தொடர்கிறது.

ராமநாதபுரத்தின் புதுவலசை கிராமத்தில் இருந்து 2008 ஆம் ஆண்டு அமீரகத்திற்கு வந்த ஷஹீது தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் மேலாளராக உள்ளார்.

பாடல் உருவாக்கம், தயாரிப்பு, இசையமைப்பாளர் என பல்துறைக் கலைஞராக வலம்வரும் ஷஹீது ரஹ்மான் தனது அடுத்த படைப்பிற்கான வேலையில் பிசியாக இருக்கிறார். விரைவில் அவரிடமிருந்து புதிய படைப்புகள் வரும் என எதிர்பார்க்கலாம்.

பாடலைப் ரசிக்க கீழே கிளிக் செய்யவும்.