UAE Tamil Web

துபாய் தவிர அமீரகம் முழுவதும் சுத்திகரிப்புப் பணிகளுக்கான நேரத்தில் மாற்றம்!

UAE-STERILISATION_

அபுதாபி: இன்று (சனிக்கிழமை) முதல் அமீரகம் முழுவதும் தேசிய சுத்திகரிப்புப் பணிகளுக்கான நேரம் மாற்றியமைப்பட்டிருப்பதாக வாம் (WAM) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நேர மாற்றத்தின்படி, இன்று முதல் இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை சுத்திகரிப்புப் பணிகள் நடைபெற இருக்கின்றன. முன்னர் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம், உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய நெருக்கடி மற்றும் பேரிடர் ஆணையம் ஆகியவை இணைந்து இம்முடிவு எடுத்திருக்கின்றன.

ஒட்டகப் போட்டி நடைபெறும் இடங்களில் வழக்கம்போல இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை சுத்திகரிப்புப் பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

துபாய்க்கு விலக்கு

துபாயில் சுத்திகரிப்புப் பணிகள் வழக்கம்போல இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும் என துபாய் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

துபாய் தவிர்த்த மற்ற எமிரேட்களில் இன்று முதல் சுத்திகரிப்புப் பணிகள் இரவு 10 முதல் காலை 6 மணி வரை நடைபெறும் என காவல்துறை அதிகாரி தெளிவுபடுத்தினார்.

இந்த முடிவு, மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைப் பெறவும், பொதுப் போக்குவரத்து, தொழில்கள் மற்றும் முக்கிய துறைகள் இயங்கவும் வழிவகுக்கும்.

dubai health workers
Image Credit : The National

இந்தப் புதிய அறிவிப்பினால் உணவகங்கள், கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டிகள், மளிகை நிலையங்கள், சூப்பர் மார்கெட் மற்றும் மருந்தகங்கள் வாரம் முழுவதும் 24 மணி நேரமும் திறந்திருக்கும்.

மேற்கண்ட நிலையங்கள் தவிர்த்து மற்ற நிலையங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்களது மொத்த திறனில் 30 சதவிகித வாடிக்கையாளர்களைக்கொண்டு மட்டுமே இயங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் குறைந்தது 2 மீட்டர் சமூக விலகலைக் கடைபிடிப்பதை இந்நிலையங்கள் உறுதி செய்யவேண்டும்.

மேலும், மக்கள் அனைவரும் சக குடிமக்கள் மற்றும் சமூகத்தின் நலன் கருதி தேசிய சுத்திகரிப்புப் பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மக்கள் அனைவரும் வீட்டைவிட்டு வெளியே செல்லாதிருக்க வேண்டும். அவசிய காரணங்களான உணவுப் பொருட்கள் வாங்கவோ, மருத்துவ உதவிகள் பெறவோ, மருந்தகங்களுக்கோ, சுகாதார நெறிமுறைகளின் அடிப்படையில் சம்பத்தப்பட்ட அதிகாரிகளால் முக்கியமான துறைகள் என வகைப்படுத்தப்பட்ட துறைகளில் பணியாற்றவோ மட்டுமே மக்கள் வெளியில் செல்ல வேண்டும்.

மேலும், மக்கள் கூட்டமாக ஒன்றினைவதையோ, உறவினர்களின் இல்லங்களுக்குச் செல்வதையோ முன்னெச்சரிக்கை காரணமாக மக்கள் தவித்திட வேண்டும். வீட்டிலிருந்து வெளியே கிளம்பும்போது மக்கள் கட்டாயம் முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



error: Alert: Content is protected !!