அமீரகத்தில் புதிய வார விடுமுறை நாட்கள் அமலுக்கு வந்திருந்தாலும், அபுதாபியில் வாகன நிறுத்தத்திற்கான கட்டண பார்க்கிங் மற்றும் டோல் கேட் செயல்படும் நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை என்றும் பழைய நடைமுறையே தொடரும் என்றும் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து துறையின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ITC தனது ட்விட்டர் பக்கத்தில், “புதிய வாராந்திர வேலை முறையின் போது, திட்டமிடப்பட்ட எங்கள் சேவைகளை நாங்கள் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம். Mawaqif மற்றும் Darb சேவைகள், மறுஅறிவிப்பு வரும் வரை வழக்கமான அட்டவணைப்படி செயல்படும்” என குறிப்பிட்டுள்ளது.
டார்ப் டோல் கேட் அமைப்பு சனிக்கிழமை முதல் வியாழன் வரை போக்குவரத்து அதிகம் உள்ள நேரங்களில், காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் கட்டண நேரமாக செயல்படும். இந்த நேரங்களில் டார்ப் டோல் கேட்டை கடந்து செல்லும் வாகனங்கள் 4 திர்ஹம்ஸ் சுங்க கட்டணமாக செலுத்த வேண்டும். வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் வழக்கம் போல், கட்டணம் இல்லாமல் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Mawaqif முறையில் சனி-வியாழன் வரை காலை 8 முதல் 12 வரை கட்டண பார்க்கிங் முறை செயல்படும். மறு அறிவிப்பு வரும் வரை இதே நிலை தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ITC இன் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் திங்கள் முதல் வியாழன் வரை காலை 7 மணி முதல் மாலை 3 மணி வரையிலும், வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும் செயல்படும்.
பொதுப் பேருந்துகள் மற்றும் படகுகள் அவற்றின் வழக்கமான அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.