UAE Tamil Web

அமீரகம்; வாரத்தில் இரண்டரை நாட்கள் விடுமுறை : உங்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில்கள் இதோ..!

UAE resumes issuing permits

அமீரகத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, வார விடுமுறையில் மாற்றம் கொண்டுவந்திருக்கிறது அமீரக அரசு. இந்த அறிவிப்பு வெளிவந்ததிலிருந்து பல்வேறு கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளது. அதனாலேயே இந்தப் பதிவு. இந்த விடுமுறை குறித்த உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதில் இதோ..

வார வேலை நாட்கள் எவ்வளவு?

ஜனவரி 1, 2022 ஆம் தேதி முதல் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை மதியம் வரையிலும் வேலை நாட்களாக இருக்கும். காலை 7.30 முதல் மதியம் 3.30 வேலை நேரங்களாக இருக்கும். அதாவது ஒரு நாளைக்கு 8.5 மணிநேரம் வேலை நேரங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை 4.5 மணி நேரங்களாக வேலை நேரம் இருக்கும்.

ஊழியர்களுக்கான வேலை நேரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கிழமை பணிநேரம்
திங்கள் – வியாழன் காலை 7.30 – மதியம் 3.30
வெள்ளிக்கிழமை காலை 7.30 – மதியம் 12

எத்தனை நாட்கள் விடுமுறை?

வெள்ளி மதியம் துவங்கி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

யாருக்கெல்லாம் இந்த அறிவிப்பு பொருந்தும்?

பெடரல் அரசுத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இந்த புதிய வார விடுமுறை பொருந்தும் என அரசு தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து அமீரக வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களும் இப்புதிய வார விடுமுறை அறிவிப்பை ஏற்க இருக்கின்றன.

மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சர், அமீரக தனியார் நிறுவனங்களும் இப்புதிய வேலைநாட்கள் குறித்த அறிவிப்பை பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் அவார் வணிக நோக்கங்களுக்கு ஏற்ற வகையில், பணியாளர்களின் செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் குடும்ப ஒற்றுமையை ஆதரிக்கும் விதத்தில் பணியாளர் பணி நேரத்தை மறுசீரமைக்க நிறுவனங்களை வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.

அதேபோல, வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், புதிய தொழிலாளர் நலச் சட்டத்தின்படி, வாரத்தில் கண்டிப்பாக ஒருநாள் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்கவேண்டும். மேலும், நிறுவனத்தின் தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த விடுமுறையை அதிகரிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சனி, ஞாயிறு வார விடுமுறை அளிக்கும் முதல் இஸ்லாமிய மற்றும் அரபு நாடு அமீரகம் தானா?

இல்லை. மொராக்கோ, மலேசியா, துருக்கி மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகள் ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு வார விடுமுறை அளிக்கின்றன.

வெள்ளிக்கிழமைகளில் பணிபுரிவது ஷரியா சட்டத்திற்கு எதிரானதா?

ஷரியா எனும் இஸ்லாமிய சட்டத்தின்படி வாரத்தின் எந்த நாளும் விடுமுறை நாளாக குறிப்பிடப்படவில்லை. அதேசமயம் வெள்ளிக்கிழமை தொழுகைக்கு முன்னர் அதிகாரப்பூர்வ பணிநேரமானது நிறைவடையவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகம் முதல்முறை வார விடுமுறையில் மாற்றம் கொண்டுவந்திருக்கிறதா?

இதுவரை 3 முறை அமீரகத்தில் வார விடுமுறை மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.

1971-1999: வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வ வார விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.

1999-2006: வியாழக்கிழமையை வார விடுமுறையில் சேர்த்தது.

2006-2021: வார இறுதி நாட்களை வெள்ளி மற்றும் சனிக்கிழமைக்கு மாற்றியது.

எதற்காக இந்த மாற்றத்தை அரசு ஏற்படுத்தியிருக்கிறது?

  • ஊழியர்களுக்கு சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை ஏற்படுத்தவும், புதிய திட்டங்கள், ஆய்வுகள், நீண்ட வார இறுதிகளில் பயணம் செய்யவும் உதவுதல்.
  • உலகளாவிய சந்தைகள் மற்றும் வங்கிகளுடன் முழு சீரமைப்பில் வணிகத்தை எளிதாக்குதல்.
  • உலகளாவிய போட்டித்திறன் குறியீடுகளில் அமீரகத்தின் தரவரிசையை உயர்த்துதல்.
  • உற்பத்தித்திறனை அதிகரிப்பது மற்றும் அரசாங்க செயல்திறனை மேம்படுத்துதல்.

ஆகியவை காரணமாக அமீரக அரசு வார விடுமுறை தினங்களை மாற்றியுள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்துமா?

ஆம். அமீரகம் முழுவதிலுமுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும். இதுகுறித்த அறிவிப்பை அமீரக கல்வி அமைச்சகம் விரைவில் வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு நிறுவனங்கள் Flexible Work எனப்படும் இலகுத்தன்மையுடன் கூடிய வேலை அமைப்பை உறுதி செய்யுமா?

ஆம். அரசு நிறுவனங்கள் தங்களது தேவைக்கேற்ப வேலை நேரங்களை மாற்றியமைத்துக்கொள்ளலாம். வெள்ளிக்கிழமைகளில் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய வாய்ப்பும் அளிக்கப்படும்.

UAE resumes issuing permits
29 Shares
Share via
Copy link