அமீரகத்தில் பெடரல் அரசு ஊழியர்களுக்கு இனி வெள்ளி, சனிக்கிழமைக்குப் பதிலாக வெள்ளி மதியம் துவங்கி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை வரை வார விடுமுறை விடப்படும் என அமீரக அரசு இன்று அறிவித்திருக்கிறது.
ஜனவரி 1, 2022 ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை முதல் வெள்ளிகிழமை மதியம் வரை மட்டுமே வேலை நாட்களாக இருக்கும்.
பெடரல் அரசு ஊழியர்களைப் பொறுத்தவரையில் காலை 7.30 முதல் மதியம் 3.30 வேலை நேரங்களாக இருக்கும். அதாவது ஒரு நாளைக்கு 8.5 மணிநேரம் வேலை நேரங்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை 4.5 மணி நேரங்களாக வேலை நேரம் இருக்கும்.
வெள்ளிக்கிழமைகளில் வீட்டிலிருந்தே பணிபுரிய பணியாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுமுறை?
இந்நிலையில் மனிதவள மேம்பாடு மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சர், அமீரக தனியார் நிறுவனங்களும் இப்புதிய வேலைநாட்கள் குறித்த அறிவிப்பை பின்பற்றுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் அவார் வணிக நோக்கங்களுக்கு ஏற்ற வகையில், பணியாளர்களின் செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் குடும்ப ஒற்றுமையை ஆதரிக்கும் விதத்தில் பணியாளர் பணி நேரத்தை மறுசீரமைக்க நிறுவனங்களை வலியுறுத்துவதாகத் தெரிவித்தார்.
அதேபோல, வெள்ளிக்கிழமை தொழுகைக்கு தொழிலாளர்களுக்கு இடைவேளை அளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், புதிய தொழிலாளர் நலச் சட்டத்தின்படி, வாரத்தில் கண்டிப்பாக ஒருநாள் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்கவேண்டும். மேலும், நிறுவனத்தின் தனிப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் இந்த விடுமுறையை அதிகரிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.