இன்னும் இரண்டு வாரங்களில் புத்தாண்டு பிறக்க இருக்கிறது. இதனால் சுற்றுலாவாசிகளின் சொர்க்கபுரியான துபாய்க்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்திருக்கிறது.
புத்தாண்டை முன்னிட்டு உலகப்புகழ் பெற்ற புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் வண்ணமிகு வாணவேடிக்கைகள் மற்றும் சிறப்பு வீடியோக்கள் வெளியிடப்படுவது வழக்கம். இதன்காரணமாக புர்ஜ் கலீஃபா அமைந்துள்ள Downtown துபாய் பகுதியில் முழுவதுமுள்ள ஹோட்டல்களில் முன்பதிவு 99% நிறைவடைந்திருக்கிறது.
துபாய் முழுவதும் உள்ள ஹோட்டல்களில் கிட்டத்தட்ட 90 சதவீத முன்பதிவுகள் நிறைவடைந்திருக்கின்றன. இருப்பினும் Downtown துபாயில் உள்ள ஹோட்டல் அப்பார்ட்மென்ட்களில் சுற்றுலாவாசிகளுக்கு தங்குமிடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் ஆனால் கட்டணமாக 40 ஆயிரம் திர்ஹம்ஸ் அங்கே வசூலிக்கப்படுவதாகவும் கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
புர்ஜ் கலீஃபாவின் இடதுபுறத்தில் அமைந்துள்ள சில ஹோட்டல்களில் புத்தாண்டு இரவு தங்குவதற்கு அறைகள் காலியாக இருக்கின்றன. அங்கு கட்டணமாக 13,000 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது. புர்ஜ் கலீஃபாவின் தோற்றம் பாதியளவு மட்டுமே இங்கே தெரியும் என்பதால் இந்த கட்டண குறைப்பை வழங்குகிறார்கள் ஹோட்டல் நிர்வாகிகள்.
இதுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் பாம் ஜுமேய்ராவில் உள்ள பீச் ஃபிரண்ட் வில்லாவில் புத்தாண்டு இரவு தங்க கட்டணமாக 78,000 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுகிறது. அங்கேயும் கிட்டத்தட்ட அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டிருகின்றன.
ஆகவே, ஹேப்பி நியூஇயர் பாடலுடன், ரூமில் கேக் வெட்டி சாப்பிட்டுவிட்டு உறங்குவதே பர்சிற்கு பாதுகாப்பு என்கிறார்கள் துபாய் வாழ் தமிழக மக்கள்.