UAE Tamil Web

இதுவரை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட யாரும் இறக்கவில்லை – அபுதாபி அரசின் நம்பிக்கை தரும் அறிவிப்பு..!

vaccination

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்ட எவரும் இதுவரையில் கொரோனாவால் மரணிக்கவில்லை என அபுதாபி பொது சுகாதார மையம் (ADPHC) நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி மூலமாக இத்தகவலை சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோசை எடுத்துக்கொண்டவர்களுக்கு கொரோனா தாக்கும் அபாயம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் ஒருவேளை அவர்கள் பாதிப்படைந்தால் லேசான அறிகுறிகள் மட்டுமே இருக்கும் எனவும் மருத்துவமனையிலோ, அவசர சிகிச்சை மையங்களிலோ (ICU) சிகிச்சைபெற வேண்டிய நிலைமை வரவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசியின் திறன் குறித்த ஆய்வில், தடுப்பூசி எடுத்துக்கொண்டு கொரோனா தாக்குதலுக்கு உள்ளானவர்களில் 93% பேர் மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய கட்டாயமில்லை எனவும் 95% பேர் ICU விற்குச் செல்வதில் இருந்து தடுப்பூசி தடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி, தடுப்பூசி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம் சிறப்பாக அடையப்படுகிறது, மேலும் நோய் எதிர்ப்பு சக்தி பன்முகத்தன்மை வாய்ந்தது, இவை ஆன்டிபாடிகளை மட்டுப்படுத்துவதில்லை எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களை கொரோனா தாக்காது என்றில்லை. இதனை மக்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும். வைரஸ் உருமாறினால் பாதிப்புகள் அதிகளவில் பரவுவதற்கான ஆபத்தையும் அதிகரிக்கும் என அபுதாபி பொது சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு ஏற்பட்ட பிறகு, சிறிய அளவில் அறிகுறிகள் இருந்தாலும் நீண்டகால உடல் உபாதைகள் சிலருக்கு ஏற்படலாம். வயதானவர்கள், நெடுநாள் வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களும் இதனால் பாதிப்படைந்திருப்பது ஆய்வு முடிவில் தெரியவந்திருக்கிறது. இது கொரோனாவிற்குப் பிறகான பாதிப்பு (post-COVID-19 syndrome) எனப்படுகிறது.

இதனால் இதயம், நுரையீரல், மூளை ஆகிய உறுப்புகள் பாதிப்படைவதுடன் இரத்தம் உறைதல் போன்றவைகளும் தோன்றுகின்றன. வேறு இன்னும் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை நீண்டகால ஆய்வுக்குப் பிறகே சொல்லமுடியும் என ADPHC தெரிவித்துள்ளது.

2020 ஆம் ஆண்டின் துவக்கத்தில் சினோபார்ம் மருந்துகளை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த அமீரக அரசு அனுமதி அளித்த போது கூறப்பட்டதைப் போலவே, கொரோனா தாக்குதலின் வீரியத்தை இம்மருத்து தடுக்கிறது என்பது புலனாவதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

அமீரகத்தில் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட தடுப்பூசியான சினோபார்ம் தற்போது மூன்றாம் கட்ட ஆய்வில் இருக்கிறது. அபுதாபியில் அதிகளவில் வழங்கப்படும் தடுப்பூசியும் இதுவேயாகும்.

இதனைத் தொடர்ந்து பைசர் – பையோஎன்டெக், ஸ்புட்னிக் V, ஆக்ஸ்போர்டு – ஆஸ்ட்ரா செனக்கா ஆகிய மருந்துகளும் அமீரகத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அபுதாபி சுகாதார நிறுவனங்கள் மற்றும் தடுப்பூசி மையங்கள் தற்போது சினோபார்ம் மற்றும் ஸ்பூட்னிக் தடுப்பூசிகளை நிர்வகிக்கின்றன.

vaccination
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap