UAE Tamil Web

துபாயில் மூன்று நாட்களுக்கு “பார்க்கிங் கட்டணம் கிடையாது”.. நாளை வரை அமலில் இருக்கும் – அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்ட RTA

நமது துபாய் நாட்டின் RTA (Roads and Transport Authority) நேற்று மே மாதம் 14ம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, துபாயில் பொது பார்க்கிங் கட்டணம் மூன்று நாட்களுக்கு இலவசமாக இருக்கும் என்று அதிலகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே நேற்று முதல் துபாய் வாகன ஓட்டிகள் நாளை மே 16 திங்கள்கிழமை வரை இந்த இலவச சேவையைப் பெற முடியும். மேலும் அடுத்த நாள் மே 17ம் செவ்வாய்கிழமை முதல் மீண்டும் வழக்கம்போல பார்க்கிங் கட்டணம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த நமது அதிபர் அமரர் திரு. ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அமைச்சகங்கள், கூட்டாட்சி மற்றும் உள்ளூர் துறைகள் மற்றும் தனியார் துறையின் பணி இடைநிறுத்தத்துடன் சேர்ந்து இந்த முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

அபுதாபியின் ஆட்சியாளரும், 2004 முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும் பணியாற்றி வந்த மதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தனது 73வது வயதில் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார்.

பல ஆண்டுகளாக நோய்வாய்ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கடந்த வெள்ளிக்கிழமை இயற்கை எய்தினார். இந்நிலையில் அமீரகம் முழுவதும் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் ஒரு பகுதியாக துபாய் RTA வெளியிட்ட தகவலின்படி நேற்று, இன்று மற்றும் நாளை ஆகிய மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக பார்க்கிங் கட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap