34.3 C
Dubai
July 14, 2020
UAE Tamil Web

அமீரகத்தில் இனி ஓட்டுனர் உரிமம் பெற NOC தேவையில்லை – வெளியான அதிரடி அறிவிப்பு..!

driving

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள எவரும் இப்போது தனது முதலாளியிடமிருந்து ‘ஆட்சேபனை இல்லை’ (no-objection certificate) என்னும் சான்றிதழை (NOC) பெறாமல் ஓட்டுனர் பயிற்சி வகுப்பை தொடங்கலாம். இதன்மூலம் ஓட்டுனர் உரிமம் எளிதாக பெற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம் தொழிலாளர்கள் அனைவருக்கும், குறிப்பாக குறைந்த வருமானத்தை கொண்டவர்கள் எவ்வித தடங்கலுமின்றி எளிய முறையில் ஓட்டுனர் பயிற்சி பெறுவதற்கும், தொழிலாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கும் ஏதுவாக இருக்கும்.

இதற்கு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 66 தொழில்முறை பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தங்கள் முதலாளிகளிடமிருந்து NOC பெறாமல் ஓட்டுனர் பயிற்சிக்கான ஃபைலை (file) திறக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களான பணியாளர்கள், வீட்டு உதவியாளர்கள், கடைகளில் விற்பனை பிரிவில் வேலை செய்யும் தொழிலாளர்கள் மற்றும் நீல காலர் தொழிலாளர்கள் போன்றோர் தங்கள் முதலாளிகளிடமிருந்து NOC பெறாமல் ஓட்டுனர் பயிற்சியை தொடங்க அனுமதி இல்லை. இப்போது, இந்த ​​புதிய விதிமுறையானது அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இது குறித்து துபாயிலுள்ள எமிரேட்ஸ் டிரைவிங் இன்ஸ்டிடியூட்டில் (EDI) வாடிக்கையாளர் சேவை மற்றும் சந்தைப்படுத்தல் இயக்குனர் பாத்திமா ரெய்ஸ் கூறுகையில், “இது மிகவும் சாதகமான நடவடிக்கையாகும், ஏனென்றால் ஓட்டுனர் உரிமங்களைப் பெற விரும்புவோர் எந்தவொரு ஓட்டுனர் நிறுவனத்திலும் ஓட்டுனர் பயிற்சிக்கான ஃபைலை திறப்பதற்கான வழிமுறையை இது எளிதாக்கும்” என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் குறைந்தபட்ச வருமானம் கொண்ட பலர், குறிப்பாக COVID-19 தாக்கத்தால் வேலை இழந்தவர்கள் மீண்டும் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க ஓட்டுனர் பயிற்சி பாடங்களை எடுக்கத் தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். இதுதவிர “விநியோக சேவைகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான தேவை அதிகரிப்பதால் மோட்டார் சைக்கிள் உரிமங்களுக்கான பயிற்சியை மேற்கொள்ள நிறைய பேர் ஆர்வமாக உள்ளனர்,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஷார்ஜாவில் உள்ள ஒரு ஓட்டுனர் பயிற்சி மையத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், விண்ணப்பதாரர்கள் தங்கள் முதலாளிகளிடமிருந்து NOC வாங்குவது இனி தேவையில்லை என்று கூறினார். அதே நேரம் “எங்களுக்குத் விண்ணப்பத்தாரர்களின் செல்லுபடியாகும் எமிரேட்ஸ் ஐடி மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள் மட்டுமே தேவைப்படும்” என்று கூறினார்.

இதற்கு முன்னர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக கடந்த மார்ச் 26 அன்று மூடப்பட்ட துபாயிலுள்ள ஓட்டுனர் பயிற்சி மையங்கள், சமூக இடைவெளியை உறுதி செய்வதற்கான புதிய வழிகாட்டுதல்களுடன் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வணிக முன்னேற்றம்:

இந்த புதிய அறிவிப்பு குறித்து அபுதாபியில் உள்ள ஓட்டுனர் பயிற்றுவிப்பாளர் ஒருவர் கூறும்போது, புதிய விதி தொழிலாளர்களின் வணிகத்தை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், குறைந்த வருமானம் பெறுபவர்கள் வேறு வேலைக்கு மாறுவதற்கும், வருமானத்தை அதிகரிப்பதற்கும் அதிக வாய்ப்புகளை வழங்கும் என்றும் கூறினார். “ஓட்டுநர் உரிமம் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான சிறந்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளன” என்று அவர் குறிப்பிட்டார்.

ஓட்டுனர் பயிற்சி மையத்தில் ஃபைல் (file) திறக்க தேவையான ஆவணங்கள்:

விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் மற்றும் ரெசிடென்சி விசா பக்கங்களின் நகல்கள்.

விண்ணப்பதாரரின் அசல் எமிரேட்ஸ் அடையாள அட்டை மற்றும் அதன் நகல்.

விண்ணப்பதாரரின் இரண்டு புகைப்படங்கள்.

விண்ணப்பதாரரின் கண் பரிசோதனை அறிக்கை.

Source: Gulf News

இதையும் படிங்க.!