துபாயில் நீண்ட காலமாக பணியாற்றிய பள்ளி ஆசிரியர்களில் ஒருவர், 37 ஆண்டுகள் ஒரே பள்ளியில் மற்றும் ஏழு வெவ்வேறு பள்ளி முதல்வர்களுக்கு பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியப் பாடத்திட்டப் பள்ளியில் உருது மற்றும் இஸ்லாமியப் பாடங்களைப் பயிற்றுவித்த பாகிஸ்தானிய வெளிநாட்டவர் கஜாலா டார் என்ற பெண்மணி தான் அவர்.
துபாயில் உள்ள GEMS Our Own English High Schoolலில் இருந்து வரும் ஜூன் 30ம் தேதி அன்று தனது பணிகளில் இருந்து விடைபெறுகிறார்.
“மிகுந்த மனகனத்துடனும் அதே சமயம் மிகவும் திருப்தியுடனும் மகிழ்ச்சியான இதயத்துடனும் நான் இங்கிருந்து புறப்படுகிறேன். இந்த அனுபவம் வேறு எதிலும் இல்லாதது” என்றார் கஜாலா. “பாகிஸ்தானில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, அங்கேயே இளங்கலைப் படிப்பையும் (பி.எட்) முடித்தேன்”.
“அரசுப் பள்ளியில் (Semi Government ) இரண்டு ஆண்டுகள் முதன்மை ஆசிரியராகப் பணிபுரிந்தேன். திருமணத்திற்குப் பிறகு, நானும் என் கணவரும் அமீரகத்திற்கு குடிபெயர்ந்தோம்” என்றார் அவர். லாகூரைச் சேர்ந்த இவர் 1981ம் ஆண்டு அமீரகம் வந்துள்ளார்.
நவம்பர் 13, 1984 அன்று உருது மற்றும் இஸ்லாமியப் பாட ஆசிரியராகப் பணியில் சேர்ந்த அவர் தற்போது தனது பணியில் இருந்து விடைபெறுவது அவரது மாணவர்களை கண்கலங்க வைத்துள்ளது.