திருச்சியில் இருந்து துபாய்க்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமானம் ரத்து செய்யப்பட்டது.
திருச்சி விமான நிலையத்திலிருந்து நேற்று அதிகாலை 1.45 மணிக்கு துபாய் செல்ல ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தயாராக இருந்தது.
இதையடுத்து பயணிகள் விமானத்தில் ஏறி அமர்ந்தனர். விமானம் புறப்படுவதற்கு முன்னதாக விமானத்தை விமானி சோதனை செய்தபோது விமான இறக்கையில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுபற்றி விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து விமானம் ரத்து செய்யப்பட்டது.
இதனால் 120 பயணிகளும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். ஏர் இந்தியா நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்கள் வந்து விமானத்தை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்ட பின்னர் நேற்று மாலை 3.45 மணிக்கு பயணிகளுடன் அந்த விமானம் திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு சென்றது.