தமிழ்நாட்டில் படித்து விட்டோ வேலைக்காகவோ அல்லது மேற்படிப்பிற்காகவோ பலரும் அமீரத்திற்கு ப்ளைட் ஏறிக்கொண்டு தான் இருக்கின்றனர். தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் அமீரக விமான நிலையத்தில் கால் பதிப்பது என்பதே வாடிக்கையாக இருக்கிறது.
விசா வேலைகளை எல்லாம் முடித்து விட்டு டிக்கெட் போட்டு அந்த விமானத்தில் ஏறி உட்காருவதே பெரிய சந்தோஷமாக இருக்கும். ஆனால் இப்போ அதிலும் ட்விஸ்ட் வைத்திருக்கிறது ஐக்கிய அரபு அமீரகம். அதாவது உங்க பாஸ்போர்ட்டில் இரண்டு பெயர்கள் இருந்தால் மட்டுமே உங்களால் அமீரகத்தினுள் நுழைய முடியும்.
அதாவது first name மற்றும் last name என்ற இரண்டுமே பாஸ்போர்ட்டில் நிரப்பப்பட்டு இருக்க வேண்டும். உங்களின் பெயர் இரண்டு வார்த்தைகளில் இருந்தால் பிரச்னையே இல்லை. அல்லது ஒற்றை பெயரை வைத்திருப்பவர்கள் இரண்டாம் பெயரில் அப்பா பெயரை குறிப்பிட்டு இருக்கும் பாஸ்போர்ட்டினை வாங்க வேண்டும். அப்படி குறிப்பிடாமல் தங்களது பெயரினை மட்டும் குறிப்பிட்டு பாஸ்போர்ட் வாங்கி இருந்தால் அவர்களால் அமீரகத்தினுள் நுழையவே முடியாது.
அதே நேரத்தில் ஒற்றை பெயரினை வைத்திருப்பவர்கள் PR அல்லது நிரந்தர குடியுரிமை வைத்திருப்பவர்கள் இரண்டாம் பெயரினை உடனே இணைத்து விட்டால் அவர்களுக்கு அமீரகத்தினுள் நுழைவது எந்த பிரச்னையுமே இருக்காது எனக் கூறப்படுகிறது. இந்த விதி கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து நடைமுறையில் இருக்கிறது.
பொதுவாக மற்ற இந்திய மாநிலங்களில் இருக்கும் அனைவருக்குமே இரட்டை பெயர்கள் தான் இருக்கும். ஆனால் பெரும்பாலான தமிழ்நாட்டு மக்கள் ஒற்றை பெயர் மட்டுமே வைத்திருப்பார்கள். அவர்களுக்கு தான் இந்த சிக்கல் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த விதி வொர்க் பாஸில் வரும் ஊழியர்களின் விசா உட்பட எல்லாருக்குமே பொருந்தும் என அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.