கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல தடுப்பூசி ஒன்றே முக்கியத் தீர்வாக கருதப்படுகிறது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி செலுத்த உலக நாடுகள் பல்வேறு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை கையாண்டு வருகின்றன. அந்த வகையில் அமீரக அரசு தேசிய தடுப்பூசித் திட்டம் மூலமாக கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்கி வருகிறது.
டெல்டா, டெல்டா ப்ளஸ் உள்ளிட்ட உருமாறிய கொரோனா தொற்றுகளில் இருந்தும் 90% தற்காத்துக் கொள்ளும் வகையில் Pfizer தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அரசின் மூலம் இயக்கப்படும் சுகாதார மையங்களில் மட்டுமே Pfizer தடுப்பூசிகள் பெரும்பாலும் போடப்பட்டு வந்தன. ஆனால் தற்போது தனியார் மருத்துவனைகளிலும் Pfizer கிடைக்க இருக்கிறது. தனியார் மருத்துவமனைகளைப் பொறுத்தவரையில் முன்பு சினோபார்ம் மட்டும் வழங்கப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.
Pfizer தடுப்பூசியை இலவசமாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
முதல் முறையாக இந்த திட்டத்தை துபாயில் உள்ள Aster Cedars மருத்துவமனை கடந்த ஜூன்27 முதல் நடைமுறைப்படுத்தியது. பொது மக்கள் Pfizer தடுப்பூசியை செலுத்திக் கொள்ள அதிக ஆர்வம் காட்டியதை தொடர்ந்து மேலும் துபாயில் உள்ள பல தனியார் மருத்துவமனைகளில் இலவச Pfizer தடுப்பூசி செலுத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ளாதவர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இது வரை அமீரகத்தில் 76% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதாகவும் 66% பேர் இரண்டு தவணைகளையும் போட்டுக்கொண்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
