அமீரகத்தில் அடுத்தடுத்து 5 நாட்கள் விடுமுறை வர இருக்கின்றன. இதனால் இப்போதே மக்கள் தங்களுடைய சுற்றுலா திட்டத்தை வகுக்கத் துவங்கிவிட்டார்கள்.
தியாகிகள் தினம்
அமீரகத்தின் பெருமையையும் பாதுகாப்பையும் புகழையும் நிலைநாட்ட தங்களது இன்னுயிரை அளித்தவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1 ஆம் தேதி நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. முன்னர் இது தியாகிகள் தினம் என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வருட நினைவு நாள் செவ்வாய்க்கிழமை அன்று வருகிறது.

49 வது தேசிய தினம்
அமீரகத்தின் 49 வது தேசிய தினம் டிசம்பர் 2 மற்றும் 3 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ஏழு எமிரேட்களும் இணைந்து அமீரகம் என்னும் நாடாக உருவான தினமே தேசிய தினம் எனக் கொண்டாடப்படுகிறது. விண்ணதிரும் வான வேடிக்கைகள், கண்கவர் ராணுவ அணிவகுப்புகள் என களைகட்டும் இந்நிகழ்ச்சியில் அமீரக குடிமக்களும் குடியிருப்பாளர்களும் கலந்துகொள்வர்.
அமீரக அரசின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளபடி டிசம்பர் 1 ஆம் தேதி தியாகிகள் தினமும், டிசம்பர் 2,3 ஆம் தேதிகளில் தேசிய தினமும் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த மூன்று நாட்கள் விடுமுறையைத் தொடர்ந்து வார இறுதி விடுமுறை இரண்டு நாட்களும் கிடைப்பதால் மொத்தம் 5 நாட்கள் விடுமுறையை மக்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.