அபுதாபியில் உள்ள போக்குவரத்து அதிகாரிகள் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து சிக்னல்களில் விதிமுறையை மீறுபவர்களை கண்டறிய ரேடார்களை பொறுத்தியுள்ளனர்.
இது குறித்து இன்று அபுதாபி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், போக்குவரத்து சிக்னல்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு ஓட்டுநர்களை வலியுறுத்தியது.
சாலைகளில் எல்லை கோடுகளை தாண்டி வாகனத்தை திருப்பாமல் செல்ல வேண்டும். இதுபோன்று சிறு சிறு திடீர் திருப்பத்தால் பல விபத்துக்கள் ஏற்படுகிறது. இது கடுமையான போக்குவரத்து விதிமீறல் என்றும் பாதைகளை திடீரென மாற்றுவதற்கும் இண்டிகேட்டர் பயன்படுத்தாததற்கும் 400 திர்ஹம்ஸ் அபராதம் விதிகப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் அபுதாபியில் பாதைகளை மாற்றும்போது இண்டிகேட்டரை பயன்படுத்தாததற்காக மொத்தம் 16,378 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
முன்னறிவிப்பு இன்றி பாதைகளை மாற்றுவது மிகவும் ஆபத்தானது என எச்சரித்துள்ள போலிஸார், போக்குவரத்து சந்திப்புகளை எச்சரிக்கையுடன் அணுகுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
குறிப்பாக போக்குவரத்து விளக்குகளை நெருங்கும் போது திடீரென பாதையை மாற்றுவது ஆபத்தாகும். இது ஓட்டுநரின் உயிருக்கும் மற்ற வாகன ஓட்டிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது” என்று காவல்துறை எச்சரித்தது.
சாலைகளில் செல்லும்போது கவனமாக இருக்கவும், வாகனங்களின் மீது கட்டுப்பாட்டை இழக்கச் செய்யும் காரியங்களை முற்றிலும் தவிர்க்கவும் அதிகாரிகள் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.