UAE Tamil Web

அமீரக மலைப்பகுதியில் காணாமல்போன 3 வயது இந்தியச் சிறுவன்; கண்டுபிடித்துத் தாருங்கள் என கண்ணீருடன் மன்றாடிய தாய் – மொத்த படையையும் களத்தில் இறக்கிய அமீரக காவல்துறை..!

RAK-Indian-boy-

கடந்த வெள்ளிக்கிழமை மாலைச்சூரியன் அஸ்தமித்து இருள் எங்கும் பரவத் துவங்கிருந்தது. ராஸ் அல் கைமா காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை வழக்கம்போல பிசியாக இருந்தது. அத்தனை வேலைப்பளுவையும் தாண்டி அனைத்து அதிகாரிகளையும் உலுக்கியது ஓர் இந்தியத் தாயின் கண்ணீர். தனது மகனைக் கண்டுபிடித்துக்கொடுக்கும்படி போனில் கதறினார் அந்தத் தாய். அடுத்த சில வினாடிகளில் மொத்த காவல்துறை படைகளுக்கும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது. பொழுது விடிவதற்குள் சிறுவனை மீட்டாகவேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ராஸ் அல் கைமாவில் உள்ள யானிஸ் மலைத்தொடருக்கு சுற்றுலா வந்திருந்த இந்தியாவைச் சேர்ந்த குடும்பம் தனது 3 வயது மகனைத் தவறவிட்டிருக்கிறது. இருள் வேகமாகத் திரண்டு மலையை ஆக்கிரமித்ததால் அவர்களால் தங்களது குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கிறது. அதன்பின்னரே காவல்துறைக்கு போன் செய்திருக்கிறது குடும்பம்.

புகார் தெரிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் ராஸ் அல் கைமா காவல்துறை. சிவில் பாதுகாப்புப்படை, குற்றவியல் விசாரணை துறை, மீட்பு மற்றும் தேசிய ஆம்புலன்ஸ்,  K9 பிரிவு, சிறப்புக் காவல் படை, அல் தக்டகா காவல்துறை, அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், ஹஸா ஃபசா (Hazaa Fazaa) அட்வென்சர் டீம், தேசிய தேடுதல் மற்றும் மீட்பு மையத்தைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் உள்ளிட்ட பிரிவினர் களத்தில் இறங்கினர்.

வெள்ளிக்கிழமை இரவு துவங்கிய தேடுதல் அடுத்தநாள் காலை வரை நீடித்தது. அதிகாலை 6 மணிக்கு ஒரு பாறையின் மீது உறங்கிக் கொண்டிருந்த சிறுவனை ஹஸா ஃபசா (Hazaa Fazaa) அட்வென்சர் டீமைச் சேர்ந்தவர்கள் கண்டுபிடித்தனர். லேசான சிறிய காயங்கள் தவிர்த்து சிறுவன் பூரண நலமுடன் இருப்பதாக ராஸ் அல் கைமா காவல்துறையின் பொது கட்டளைத்துறை தெரிவித்துள்ளது.

சிறுவனை அவனது குடும்பத்தாரிடம் ஒப்படைத்த காவல்துறை, மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்லும்போது குழந்தைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அரசு மற்றும் காவல்துறை விதித்திருக்கும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிக்கவேண்டும் எனவும் பொதுமக்களை வலியுறுத்தியது.

சிறுவனை மீட்கும் பணியில் ஈடுபட்ட அனைத்து குழுவினருக்கும் ராஸ் அல் கைமா காவல்துறையின் பொது கட்டளைத்துறை நன்றி தெரிவித்திருக்கிறது. உரிய நேரத்தில் உதவி செய்து, மகனை மீட்டுத்தந்த காவல்துறையினருக்கு பெற்றோர் கண்ணீர்மல்க நன்றி தெரிவித்தனர்.

RAK-Indian-boy-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap