உம் அல் குவைன் காவல்துறையின் பொதுக் கட்டளைப் பிரிவில் முதல் நிலை அதிகாரியாக பணிபுரிந்துவருபவர் அப்துல்லா சலீம் முஜிரேன் அல் ஷம்சி. கடந்த சில நாட்களுக்கு முன்னர் சாலையில் சென்றுகொண்டிருக்கும் போது, முதியவர் ஒருவர் பஞ்சரான காரின் டயரை மாற்ற சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறார் அல் ஷம்சி.
உடனடியாக காரை நிறுத்திவிட்டு ஓடிச்சென்றவர், முதியவரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு காரின் டயரை தானே மாற்றிக் கொடுத்து, முதியவரை வழியனுப்பி வைத்திருக்கிறார்.
இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, பலரும் ஷம்சியின் இச்செயலுக்கு பாராட்டுத் தெரிவித்துவந்தனர். இந்நிலையில், உம் அல் குவைனின் பட்டத்து இளவரசரும் உல் அல் குவைன் நிர்வாகக் கவுன்சிலின் தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் ரஷீத் பின் சவுத் அல் முவல்லா இச்செய்தியை கேள்விப்பட்டு, உடனடியாக அல் ஷம்சியை நேரில் வரவழைத்து பாராட்டியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் பாராட்டுச் சான்றிதழ் ஒன்றினையும் இளவரசர் ஷம்சிக்கு அளித்திருக்கிறார். உம் அல் குவைன் காவல்துறை மட்டுமல்லாது அனைவரும் இவரைப்போல் (ஷம்சி) பிறருடைய துயரைத் துடைப்பதில் முனைப்பு காட்டவேண்டும் எனவும் இளவரசர் வலியுறுத்தியுள்ளார்.
