UAE Tamil Web

காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை..கர்ப்பிணிகளுக்கு பிரசவம்…ஆப்கன் மக்களுக்கு தாயுள்ளத்தோடு அடைக்கலம் கொடுத்த அமீரகம்!

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு வாழ விரும்பாத மக்கள் பலர் பல்வேறு நாடுகளில் குடிபெயர்ந்து வருகின்றனர். மேலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை பத்திரமாக அவரவர் நாடு கொண்டு சேர்க்க அமீரக அரசு உதவி செய்து வருகிறது. இதற்காக அண்மையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் உள்ளிட்ட உலக நாட்டுத் தலைவர்கள் அமீரகத்திற்கு நன்றி தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் அமீரக அரசு ஆப்கனில் இருந்து வெளியேறிய 8,500 பேருக்கு தற்காலிக வாழ்விடத்தை அபுதாபியில் அமைத்து கொடுத்துள்ளது. 30% குழந்தைகள் 40% பெண்கள் 30% ஆண்கள் என ஆப்கனில் இருந்து வெளியேறிய 8500 பேருக்கும் தங்கும் வசதி, உணவு உள்ளிட்டவைகளை வழங்கி அமீரக அரசு சேவையாற்றி வருகிறது.

ஆப்கனில் இருந்து வந்த கர்ப்பிணிகளுக்கு இலவசமாக பிரவசம் பார்த்து பச்சிளம் குழந்தைகளை கவனித்து வரும் சுகாதாரத்துறை, காயம் அடைந்தவர்களுக்கும் சிகிச்சை அளித்து வருகிறது. இதேபோல கூட்ட நெரிசலில் சிக்கி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளையும் சுகாதாரத்துறை செய்து வருகிறது. ஆப்கன் பிரச்னை தொடங்கிய நாள் முதல் பல்வேறு வழிகளில் உதவிக்கரம் நீட்டி வரும் அமீரக அரசுக்கு பல தரப்பட்டோரும் நன்றியுடன் பாராட்டையும் தெரிவித்து வருகின்றனர்.

0 Shares
Share via
Copy link