ஷார்ஜாவின் அல் தாவுன் தெருவில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த விபத்தில் கர்ப்பிணிப்பெண் உயிரிழந்திருப்பதாகவும் அவரது 4 வயது மகன் படுகாயமடைந்திருப்பதாகவும் ஷார்ஜா காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த விபத்து குறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதுமே, விரைந்துவந்த காவல்துறை மற்றும் தேசிய ஆம்புலன்ஸ் வீரர்கள் காயமுற்ற கர்ப்பிணிப்பெண் மற்றும் அவரது மகனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
ஆனால் துரதிருஷ்டவசமாக கர்ப்பிணிப்பெண் மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர். 4 வயது சிறுவன் பலத்த காயத்துடன் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள சிசிடிவி மற்றும் ரேடார் பதிவுகளை ஆராய்ந்த காவல்துறை அதிகாரிகள், சாலையை கடக்கும் பகுதியை விடுத்து வேறு இடத்தில் பெண்மணி சாலையைக் கடந்திருக்கிறார்.
விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற கார் டிரைவரை 8 மணி நேரத்திற்குள் காவல்துறை கைது செய்திருக்கிறது. மக்கள் சாலையைக் கடப்பதற்கு விதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சாலையைக் கடக்க வேண்டும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
