39.2 C
Dubai
September 22, 2020
UAE Tamil Web

விடுமுறை தினங்களிலும் இந்திய துணைத் தூதரகம் இயங்கும் – யாரெல்லாம் விடுமுறை தினங்களில் சேவையைப் பெறலாம்?

consulate

துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் விடுமுறை நாட்களிலும் (வெள்ளி மற்றும் சனிக்கிழமைகள் உட்பட) காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர தேவைகள் இருப்போர் மட்டுமே இந்த விடுமுறை நாட்களில் சேவை பெற அனுமதிக்கப்படுவார்கள். ஆகஸ்டு 1 ஆம் தேதியிலிருந்து இந்தாண்டு இறுதிவரையில் (31/12/2020) இந்த நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை தினங்களில் துணைத் தூதரகத்திற்கு வருவோர், அதற்கு முன்பு துணைத் தூதரகத்தின் 24×7 மணி நேரமும் இயங்கும் உதவி தொலைபேசி எண்களுக்கு அழைத்து, பெற வேண்டிய சேவைக்கு தேவைப்படும் சான்றிதழ்கள் பற்றியும் பெற இருக்கும் சேவை அவசரம் என வரையறுக்கப்பட்டதுதானா? என்பதையும் அந்த சேவையானது துணைத் தூதரகத்தினால் அடுத்த வேலை நாளிற்கு ஒத்திவைக்க முடியாதது என்பதனையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

பாஸ்போர்ட், விசாக்கள், அவசர சான்றிதழ்கள் மற்றும் விதிவிலக்கான தேவைகளை உடையவர்களுக்கு மட்டுமே இந்நாட்களில் சேவையானது அளிக்கப்படும். பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்காக வருவோர் https://embassy.passportindia.gov.in/ என்ற இணைய முகவரிக்குச் சென்று கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், குறைந்த பின்புல ஒளியில் சமீபத்தில் எடுக்கப்பட்ட  புகைப்படங்கள், பாஸ்போர்ட்டின் முதல் மற்றும் இறுதிப் பக்கங்களின் நகல்,  விசா நகல்/எமிரேட்ஸ் ஐடி எண் மற்றும் அவசரநிலை என்பதை நிரூபிப்பதற்கான சான்று ஆகியவற்றையும் இணைக்கவேண்டும்.

அவசரநிலை பாஸ்போர்ட் புதுப்பித்தலின்போது சுய தகவல்களில் திருத்தம் செய்வதற்கு அனுமதியில்லை. இன்றைய தேதியில் வழக்கமான விசா சேவைகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

அவசர விசா குறித்த தேவை இருப்பவர்கள் https://www.egidubaLgov.in/page/categories-of-visa/ என்னும் இணையதள முகவரிக்குச் சென்று சேவையைப் பெற தேவையான ஆவணங்களைப் பற்றி அறிந்த பின்னர் துணைத் தூதரக அலுவலகத்திற்கு அவசரநிலை என்பதை நிரூபிப்பதற்கான சான்றுடன் வரவேண்டும். விசா விண்ணப்பம் துணைத் தூதரக அலுவலகத்தில் வைத்தே பூர்த்தி செய்யப்பட வேண்டும். இவை தவிர்த்து துணைத் தூதரகத்தின் தலையீடு தேவைப்படும் தொழிலாளர் வழக்குகள், இக்கட்டான சூழ்நிலையில் உள்ளோரும் துணைத் தூதரகத்தை இந்நேரங்களில் அணுகலாம்.

துணைத் தூதரகத்திற்கு வருவதற்கு முன்பு, கீழ்க்கண்ட உதவி தொலைபேசி எண்களுக்கு அழைத்து அனுமதிபெற வேண்டும். சேவையைப் பெற, அழைப்பின் போது உங்களுக்கு பிரத்யேக குறிப்பு எண் (Unique Reference Number) ஒன்று வழங்கப்படும்.

அவசர தூதரக சேவை எண்கள்

056-5463903 (24×7)

054-3090575/ 054-3090571/ 054-3090572 (அனைத்து நாட்களிலும் காலை 8 மணிமுதல் இரவு 8 மணி வரையில்)

அவசர தேவைகள் இருப்பவர்கள் தவிர்த்து மற்ற வழக்கமான சேவைகள் தேவைப்படுவோர் மற்ற வேலைநாட்களில் துணைத் தூதரகத்தினை அணுகலாம். அதேபோல, அலுவலக நேரம் முடிந்த பிறகு மற்றும் விடுமுறை நாட்களில் துணைத் தூதரகத்தின் முன்னால் கூட்டம் கூடுவது அமீரக விதிகளுக்கு புறம்பானதாகும். ஆகவே, உண்மையிலேயே அவசர தேவையிருப்போர் மட்டுமே இந்த சிறப்பு பணி நேரத்தினைப் பயன்படுத்திக்கொள்ள வலியுறுத்தப்படுகிறது.

இதையும் படிங்க.!

error: Alert: Content is protected !!