அமீரக மருத்துவமனையிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் பிரித்விராஜ்.! எதற்காக.?

actor prithviraj

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான, பிருத்விராஜ் அபுதாபியை தளமாகக் கொண்ட அஹாலியா மருத்துவமனை குழுவிடம் தனது சமீபத்திய படத்தில் தெரியாமல் அதன் நற்பெயருக்கு களங்கம் செய்ததற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

2019-ன் இறுதியில் வெளியான ‘டிரைவிங் லைசென்ஸ்’ என்ற மலையாள திரைப்படத்தில், அஹாலியா மருத்துவமனை குழுமத்தை நடிகர் பிருத்விராஜ் கேலி செய்யும் ஒரு காட்சி உள்ளது. இதுகுறித்து கேரளாவின் கொச்சியில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய அந்த மருத்துவமனைக் குழு, அந்த திரைப்படத்தின் நகைச்சுவை காட்சியில் அவர்கள் மருத்துவமனை குழுமத்தை எவ்வாறு அவதூறாகக் சித்தரித்திருக்கிறார்கள் என்று வருத்தம் தெரிவித்தது.

இதன் விளைவாக அந்த திரைப்படத்தின் தயாரிப்பாளர், நடிகரும்-தயாரிப்பாளருமான பிருத்விராஜ் மற்றும் இயக்குனர் ஜீன் பால் லால் உள்ளிட்டவர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது பிருத்விராஜ் மன்னிப்பு கோரியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்திற்கு மன்னிப்பு கோரி நடிகர் பிரித்விராஜ் தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் “எனது திரைப்படத்தின் ஒரு காட்சியில், இந்தியாவிலும் வெளிநாட்டிலும், பல ஆண்டுகளாக நற்பணிகளையும் செய்துகொண்டிருக்கும் ஒரு உண்மையான மருத்துவமனை இயங்குகிறது என்பதை உணராமல், நான் அஹாலியா மருத்துவமனையைப் பற்றி ஒரு அவதூறான குறிப்பைக் கொடுத்தேன். அந்த படத்தில் காட்டப்பட்டுள்ள அஹாலியா மருத்துவமனை முற்றிலும் கற்பனையானது (Fictional) மற்றும் உண்மையான மருத்துவ சேவை வழங்குநருக்கு எந்தவிதமான தாக்கமும் இல்லை. அதன் உரிமையாளர்கள், ஊழியர்கள், மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு வலியை ஏற்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஒரு பிரபலக நடிகர் எப்படி வாகன ஓட்டுநர் உரிமையை வெகு விரைவில் பெற முயற்சிக்கிறார் மற்றும் அதற்காக அந்த நடிகரின் தீவிர ரசிகரான வாகன ஆய்வாளரை எப்படி சமாளிக்கிறார் என்பதை கருவாக கொண்ட படம் தான் ‘டிரைவிங் லைசென்ஸ்’. அதில் அந்த பிரபல நடிகர் ஹரீந்திரன் கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜும் மற்றும் வாகன ஆய்வாளர் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் வெஞ்சராமுடும் நடித்துள்ளார்கள். நடிகர் பிரித்விராஜ் சொந்த தயாரிப்பில் வெளியான இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...