UAE Tamil Web

முகமது நபி (ஸல்) எங்களுடைய வழிகாட்டி – நபிகளின் பிறந்தநாளையொட்டி அமீரக ஆட்சியாளர்கள் வெளியிட்ட ட்வீட்கள்..!

Prophet Muhammad birthday

முகமது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அமீரக ஆட்சியாளர்கள் பல்வேறு ட்வீட்கள் மூலமாக நபி அவர்களின் மீதான தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளனர். அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி (இன்று) நபிகளின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

- Advertisment -

இதுகுறித்து அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் வெளியிட்ட ட்வீட்டில்,” மனித குலத்தின் மீது அவர் (நபி) காட்டிய வெளிச்சத்தின் பாதையில் மக்கள் அவரது பாதையினைத் தொடரவேண்டும். அனைத்து மக்களின் மீதும் கருணை காட்டவே அவர் தோன்றினார். அவருடைய நிலத்தில் நீரைப் பருகவும், அவை எந்நாளும் வற்றாமல் இருக்கவும் அல்லா அருள்புரியட்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஷேக் முகமது வெளியிட்ட வீடியோவில், நபி தன்னுடைய வழிகாட்டி என ஆட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.

“இரக்கம், சகிப்புத்தன்மை மற்றும் அமைதியை பரப்பவே பிறந்த மாமனிதர். வலுவான நீதியைக் கொண்ட சமூகத்தையும் நல்ல நாகரீகத்தையும் அவர் கட்டமைத்தார். அவருடைய வாழ்வின் அடிநாதமாக கருணையும் அன்பும் இருக்கின்றன. மனிதகுலம் அமைதியுடனும் வளமுடனும் இருக்க நாம் பிரார்த்திப்போம்” என அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல, சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை அமைச்சர் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான் (Sheikh Nahyan bin Mubarak Al Nahyan) வெளியிட்டுள்ள ட்வீட்டில்,” இந்த நாள் நபி அவர்களின் சகிப்புத்தன்மை மற்றும் இரக்கத்தை நமக்கு நினைவூட்டுகிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

“அவருடைய வார்த்தைகள் மற்றும் செயல்களைப் பின்பற்றுங்கள். அதுவே இரக்கம், சகிப்புத்தன்மை, கருணை மற்றும் பன்முகத்தன்மையை மதித்தல் போன்ற காரணங்களினால் இஸ்லாமிய சமூகம் உலகளவில் அறியப்பட காரணமாக அமைந்துள்ளது. இதனை அடிப்படையாகக்கொண்டே அமீரகம் இயங்குகிறது. இதனை நாட்டிலும், பிராந்தியத்திலும் உலகளவிலும் பரப்ப சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு அமைச்சகம் உழைத்து வருகிறது. அமீரகத்தின் பாரம்பரியத்தினைப் போற்றுவது அமீரகத்தின் 7 தூண்களில் ஒன்றாகும். நபிகளின் வார்த்தைகள் மற்றும் செயல்கள் நமக்கெல்லாம் வழிகாட்டியாக அமைகின்றன” என ஷேக் நஹ்யான் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.