UAE Tamil Web

உங்களது விமான டிக்கெட்டின் விலையைப் போல் 50 மடங்கு பணம் பரிசு – எதிஹாட் ஏர்வேஸின் அதிரடி ஆஃபர்..!

Etihad_Air_

உங்களது விமான டிக்கெட் விலையைப் போல் 50 மடங்கு பணத்தினைப் பரிசாகப் பெறலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் எதிஹாட் ஏர்வேஸ் அறிவித்துள்ள இத்திட்டம் பற்றித் தெரிந்தால் நீங்களும் நம்புவீர்கள்.

அமீரகத்தின் 50 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு கடந்தவாரம் 50,000 பரிசுகளை வழங்கும் பிரம்மாண்ட திட்டம் ஒன்றிணை அந்நிறுவனம் துவங்கியது. அதன் ஒருபகுதியாக மேற்கூறிய திட்டமும் இடம்பெற்றிருக்கிறது.

இந்த ரமலான் விற்பனையி்ன் போது தேர்வு செய்யப்படும் மூன்று அதிர்ஷ்ட வெற்றியாளர்களுக்கு எதிஹாட் கிரெடிட்டில் (Etihad credit)  தாங்கள் செலவு செய்த விமானக் கட்டணத்தைப் போல் 50 மடங்கு விமான கட்டணம் வழங்கப்படும் என எதிஹாட் தெரிவித்துள்ளது.

இந்த பரிசுத் தொகையைக்கொண்டு இரண்டு ஆண்டுகளுக்குள் எந்த நேரத்திலும் விமானங்கள் (Flights), மேம்படுத்தல்கள் (Upgrades) மற்றும் கூடுதல் கட்டணங்கள் (Extras) ஆகியவற்றிற்கு பயன்படுத்திக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது நீங்கள் 1000 திர்ஹம்ஸ் கொடுத்து டிக்கெட் வாங்குகிறீர்கள். போட்டியின்போது உங்களுடைய பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டால் உங்களுடைய எதிஹாட் கிரெடிட்டில் 50,000 திர்ஹம்ஸ் வந்துசேரும்.

இதில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டுமானால் ஏப்ரல் 20 முதல் மே 12 வரை அபுதாபியிலிருந்து அதன் உலகளாவிய நெட்வொர்க்கில் உள்ள எந்த இடத்திற்கும் ஒரு விமான டிக்கெட்டை முன்பதிவு செய்து டிசம்பர் 31, 2021 க்கு முன் பயணிக்க வேண்டும்.

எதிஹாட் கெஸ்ட் மைல்ஸ் (Etihad Guest Miles) மூலமாக முன்பதிவு செய்யும் நபர்களிலும் மூன்று தனித்தனி வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் நுழைய பயணிகள் எதிஹாட் கெஸ்டின் உறுப்பினராக இருக்க வேண்டும். அதன்மூலமாக மட்டுமே எதிஹாட் கிரெடிட் மற்றும் எதிஹாட் கெஸ்ட் மைல்களைப் பெறவும் பயன்படுத்தவும் முடியும்.

இதுமட்டுமல்லாமல் இந்த ரமலான் மாதத்தில் தனது நெட்வொர்க் முழுவதிலும் 1000 பரிசுகள் வழங்கும் திட்டம் ஒன்றினையும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எகானமி விமான டிக்கெட், பிசினஸ் கிளாஸ் டிக்கெட்டாக அப்கிரேட் செய்துகொள்தல், எதிஹாட் சில்வர் மற்றும் கோல்ட் மெம்பர்ஷிப், எதிஹாட் கெஸ்ட் மைல்ஸ் இன்னும் பல பரிசுகள் பயணிகளுக்கு காத்திருக்கின்றன.