fbpx
UAE Tamil Web

இந்தியா – ராஸ் அல் கைமா இடையே சேவையைத் துவங்கும் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம்..!

SpiceJet-

இந்தியா – ராஸ் அல் கைமா இடையே ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வருகின்ற நவம்பர் 26, 2020 ஆம் தேதி முதல் விமான சேவைகளைத் துவங்கும் என ராஸ் அல் கைமா விமான நிலையம் தெரிவித்திருக்கிறது. வாரம் இரண்டு விமானங்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவிற்குப் பிறகு வர்த்தக விமான சேவையை நிலைப்படுத்தும் நோக்கில் இம்முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், ராஸ் அல் கைமா – டெல்லி மற்றும் அங்கிருந்து இந்தியாவின் 28 இலக்குகளுக்கு இந்த விமான சேவை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இரு நிறுவனங்களின் செய்தித் தொடர்பாளர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்துப் பேசிய ராஸ் அல் கைமா விமான நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஞ்சய் கண்ணா,” ராஸ் அல் கைமாவிற்கு ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமான சேவை துவங்கப்பட்டது கொரோனா காலத்திற்குப் பிறகு நாங்கள் வர்த்தக சேவைகளுக்குத் தயாராகிவிட்டோம் என்பதை உணர்த்துகிறது. அமீரக மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியனாகும். அதாவது, அமீரகத்தின் மொத்த மக்கட்தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 27 சதவீதமாகும். இதுவே இரு நாடுகளுக்கிடையேயான இணைப்பை கட்டாயமாக்குகிறது” என்றார்.

இந்த விமான சேவையில் SG 160 விமானம் போயிங் 737-800 பயன்படுத்தப்பட இருக்கிறது. இதில் 189 பயணிகள் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – அமீரகம் 

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திலிருந்து வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 22:30 மணிக்குக் கிளம்பும் விமானங்கள் வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் 00:50 மணிக்கு ராஸ் அல் கைமா விமான நிலையத்திற்கு வந்திறங்கும்.

அமீரகம் – இந்தியா

வாரந்தோறும் ராஸ் அல் கைமா விமான நிலையத்திலிருந்து திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 01:50 மணிக்குக் கிளம்பும் SG 161 விமானம் 06:40 மணிக்கு இந்தியா சென்றடையும். இந்தியாவின் மேலும் சில விமான நிலையங்களுக்கு எதிர்வரும் மாதங்களில் சேவை நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அமீரகம் – இந்தியா இடையே குடும்பங்களை இணைப்பதில் ஸ்பைஸ் ஜெட் முக்கிய பங்காற்றுகிறது. கொரோனாவிற்கு பிறகான எங்களது நடவடிக்கைகள் ராஸ் அல் கைமாவின் வளர்ச்சி, சுற்றுலாத்துறை மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் மிக முக்கிய மையமாக அமையும். வரும் காலங்களில் பயண கட்டுப்பாடுகள் படிப்படியாக எளிதாக்கப்படும் என நம்புகிறோம்” என ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் அஜய் சிங் தெரிவித்தார்.

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் டெல்லி – ராஸ் அல் கைமா – டெல்லியை இணைக்கும் மலிவான ரிட்டர்ன் டிக்கெட்டின் விலை 730 திர்ஹம்ஸ் ஆகும். அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜாவிலிருந்து ராஸ் அல் கைமா விமான நிலையத்திற்கு இலவச போக்குவரத்து வசதி செய்துதரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஸ் அல் கைமாவிலிருந்து துபாய், ஷார்ஜா, அஜ்மான், புஜைரா, கோர்ஃபக்கான், திப்பா மற்றும் உம் அல் குவைன் ஆகியவற்றை எளிதில் அடையலாம் என்பதால் இந்த விமானப் போக்குவரத்து முக்கியத்துவம் பெறுவதாகத் தெரிவிக்கப்படுள்ளது.