UAE Tamil Web

நள்ளிரவில் வாகனங்களால் எழுந்த இரைச்சல் – 369 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறை..!

noisy bikes

ராஸ் அல் கைமா காவல்துறையினரால் தீவிர சாலைப் பாதுகாப்புத் திட்டம் அந்த எமிரேட் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் வாகன விதிமீறலில் ஈடுபட்ட 369 பைக்குகள் மற்றும் இ – ஸ்கூட்டர்களை காவல்துறையினர் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

- Advertisment -

இவற்றில் பெரும்பாலானவை இரவு நேரங்களில் பொது மக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் சப்தமெழுப்பியதாக ராஸ் அல் கைமா காவல்துறையின் மத்திய செயல்பாடுத்துறை தலைமை இயக்குனர் பிரிகேடியர் டாக்டர் முகமது சயீத் அல் ஹுமைதி (Mohammed Saeed Al Humaidi) தெரிவித்தார்.

“கைப்பற்றப்பட்ட வாகனங்களில் பெரும்பாலானவற்றை இயக்கியவர்கள் இளைஞர்களே ஆகும். போக்குவரத்து விதிமுறைகளை அவர்கள் காற்றில் பறக்கவிட்டுவிடுகிறார்கள்” என ஹுமைதி தெரிவித்தார்.

ராஸ் அல் கைமா காவல்துறையினரால் இந்த வருடம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கண்காணிப்புத் திட்டங்களின் மூலமாக பல பைக்குகள் மற்றும் இ – ஸ்கூட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை பதிவு செய்யாமல், ஓட்டுனர் உரிமம் இல்லாத இளைஞர்களால் இயக்கப்பட்டவை என காவல்துறை தெரிவித்திருக்கிறது.

“எல்திசம் (Eltizam) அல்லது ஆப்ளிகேஷன் (Obligation) என்னும் திட்டத்தின் கீழ் இரைச்சலுடன் மற்றும் பொறுப்பில்லாமல் இயக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இம்மாதிரியான விதிமீறலுக்கு நாங்கள் எப்போதும் எதிரானவர்கள்” என ஹுமைதி தெரிவித்தார்.

அதிவேகம் காரணமாக ஏற்படும் விபத்துகள் மற்றும் சாலை விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ராஸ் அல் கைமா காவல்துறை ஏற்படுத்திவருகிறது. மேலும் குடியிருப்பு வளாகங்களுக்குச் சென்று சாலை உபயோகிப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும், சாலை விபத்துக்களை குறைக்கவும் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் மற்றும் அறிவுரைகளை கட்டண சேவைகளாக வழங்கிவருகிறது.

“இம்மாதிரியான கண்காணிப்புத் திட்டங்கள் இவ்வருடம் முழுவதும் தொடரும். கைப்பற்றப்பட்ட வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட கெடு முடிவடைவதற்குள் அபராதமானது செலுத்தப்பட்டிருக்கவேண்டும். தொழில்நுட்ப கமிட்டி அளிக்கும் ஒப்புதலின் அடிப்படையிலேயே கைப்பற்றப்பட்ட வாகனங்கள் விடுவிக்கப்படும்” என ஹுமைதி தெரிவித்தார்.