ராஸ் அல் கைமாவின் கலிலா பகுதியில் உள்ள காண்டஸ் மலை பகுதியில்(Qandus mountain) மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த போது, வழி தவறி மலையின் கடினமான பகுதி ஒன்றில் தவித்து கொண்டிருந்த சுற்றுலா பயணியை, எமிராட்டி நபர் ஒருவர் பத்திரமாக மீட்டுள்ளார்.
குறிப்பிட்ட மலை பகுதிக்கு சென்ற எமிராட்டியான அஹ்மத் அல் ஷெஹி, மலையின் கடினமான பகுதிக்கு வழிதவறி சென்று பரிதவித்து கொண்டிருந்த 36 வயதான கிரேக்க சுற்றுலாப் பயணியை தற்செயலாகக் கண்டறிந்து, திரும்பி செல்வதற்கு அவருக்கு உதவியுள்ளார்.
ராஸ் அல் கைமாவில் உள்ள சிவில் பாதுகாப்புத் துறை, கிரேக்க நபரை துணிச்சலாக மீட்டு முன்மாதிரி முயற்சியில் ஈடுபட்ட அஹ்மத்தை கவுரவித்தது. இந்நிலையில் தனது செயல் பற்றி கூறியுள்ள அஹ்மத், ‘சில நாட்களுக்கு முன்பு, மழை பெய்யும் புகைப்படங்களை எடுக்க அமீரகத்தின் இரண்டாவது மிக உயர்ந்த சிகரமான காண்டஸ் மலைக்கு, மலையேற்றத்திற்கு சென்றேன்.
சற்று கடினமான பகுதி ஒன்றில் மலையேறி சென்று கொண்டிருந்த போது. எனக்குப் பின்னால் சில விசித்திரமான ஒலிகள் திடீரென கேட்பதை கவனித்தேன். சத்தம் கேட்ட இடத்தை நோக்கி நான் சென்ற போது, மிகவும் சோர்வடைந்து காலில் காயத்தால் அவதிப்பட்ட கிரேக்க சுற்றுலாப்பயணியின் குரல் அது என்பதை கண்டேன்.
உடனடியாக அவருக்கு அருகில் சென்று தண்ணீர் மற்றும் உணவு வழங்கினேன். அவரின் கால் காயத்தை என் தலையில் சுற்றி இருந்த துணியை கொண்டு மூடினேன். என்னிடம் பேசிய அந்த சுற்றுலா பயணி தான் துபாயிலிருந்து ராஸ் அல் கைமாவுக்கு மலையேற்றத்திற்காக வந்ததாகவும், ஆனால் மலையேற்றத்தின் போது வழி தவறிவிட்டதாகவும் கூறினார். மேலும் அவரிடமிருந்த உணவு மற்றும் தண்ணீர் காலியாகி விட்டதாக என்னிடம் கூறினார் என்று அஹ்மத் தெரிவித்துள்ளார்.
பின்னர் காயமடைந்த சுற்றுலாப் பயணியுடன் மலைப்பாதையில் இறங்கி 5 கி.மீ தூரத்தில் உள்ள ஷாம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அவரின் வாகனம் வரை உடன் சென்றுள்ளார் அஹ்மத். கிரேக்க சுற்றுலாப் பயணி, அல் ஷெஹியின் ஆதரவிற்கும், உதவிக்கும் நன்றி தெரிவித்தார். அஹ்மத்தின் செயலுக்கு பல தரப்பினரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வரும் அதே நேரத்தில், சிவில் பாதுகாப்புத் துறையும் சுற்றுலாப்பயணிக்கு உதவிய எமிராட்டி அஹ்மத் அல் ஷெஹியை பாராட்டியுள்ளது.