UAE Tamil Web

“உடல் மிகவும் ஆழத்திற்குச் சென்றுவிட்டது” – வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுவனுக்கு நேர்ந்த அவலம்..!

sewage pit

ராஸ் அல் கைமாவில் உள்ள தனது வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான் ரஷீத் ஹமாத் என்னும் 6 வயது சிறுவன். வீட்டு வேலைகளில் மூழ்கியிருந்த அம்மாவிற்கு ரஷீத்தின் ஞாபகம் வந்தவுடன் குரல் எழுப்பியிருக்கிறார். பதிலில்லை.

- Advertisment -

வீட்டைச் சுற்றி அம்மா தேடத் துவங்கியிருக்கிறார். வீட்டில் ஆளில்லை என்பது தெளிவானதும் வெளியே சென்றிருப்பானோ என்ற நோக்கத்தில் அக்கம்பக்கத்தினரிடம் விசாரிக்க, யாரும் ரஷீத்தை பார்த்ததாக சொல்லவில்லை.

அதன்பின்னர் ரஷீத்தின் தந்தை மற்றும் அவரது சகோதரர்கள் ஆகியோரும் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். அப்போதுதான் அப்பாவிற்கு வீட்டிற்கு பின்புறம் இருந்த கழிவுநீர் குழாய் திறந்து கிடந்தது ஞாபகத்திற்கு வரவே ஓடிச்சென்று பார்த்திருக்கிறார். ஆனால் அங்கே ஏதுமில்லை.

மீண்டும் தேடுதல். இப்படி நேரங்கள் கழிந்ததே தவிர ரஷீத் கிடைக்கவில்லை. உடனடியாக ராஸ் அல் கைமா மத்திய செயல்பாட்டு அறைக்கு தகவல் அளித்திருக்கிறது குடும்பம். சற்று நேரத்திற்கெல்லாம் சிவில் பாதுகாப்புப்படை மற்றும் மீட்புப்படை வீட்டிற்கு விரைந்துவந்தது.

ஒரு மணிநேரம் நிகழ்ந்த தேடுதல் வேட்டைக்குப் பிறகு, மீட்புப்படை கழிவு நீர் குழாய்க்குள் தேட முடிவெடுத்திருக்கிறது. நீளமான குச்சியை உள்ளிறக்கியபோது எதிலோ குச்சி மோதுவது தெரிந்தது. அது ரஷீத்தின் உடல் தான் எனத் தெரிவதற்கு வெகுநேரம் பிடிக்கவில்லை.

வீட்டினர் தேடும்போதே ரஷீத்தின் உடல் ஆழத்திற்குச் சென்றுவிட்டதால் அவர்களால் கண்டுபிடிக்க முடியாமல் போயிருக்கிறது.

மூடப்படாமல் கிடந்த கழிவுநீர் குழாயில் சிக்கி உயிரிழந்த ரஷீத், குடும்பத்திற்கு ஒரே பையனாவான். அவனுடைய எதிர்பாராத மரணம் அண்டை வீட்டார், நண்பர்கள் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

நடந்து முடிந்த ரஷீத்தின் இறுதிச்சடங்கில் நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். கழிவுநீர் குழாய்களை கவனமாக மூடுமாறு அதிகாரிகள் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.