கோவிட்-19 பெருந்தொற்று ஒரு பக்கம் மக்களை பயத்தில் வைத்திருந்தாலும் உலகமே கொண்டாட காத்திருக்கும் அந்த ஒரு நாள் “புத்தாண்டு தினம்”.
அமீரகத்தின் பல இடங்களில் எப்போதுமே புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிரமாண்ட வானவேடிக்கைகள், கலை நிகழ்ச்சிகள், பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்ததாக இருக்கும். தொற்றுக்கு மத்தியிலும் அமீரகம் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்துள்ளது. எனவே துபாய் உட்பட அமீரகத்தின் பல எமிரேட்டுகளிலும் புத்தாண்டை தொற்றுக்கு எதிரான கடுமையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வழக்கமான உற்சாகத்துடன் வரவேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
4 கி.மீ.. 10 நிமிடங்கள்..
இதன் ஒரு பகுதியாக 2021-ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக 4 கிலோ மீட்டர் நீளத்திற்கு தொடர்ந்து 10 நிமிடங்கள் வர்ண்ண மழை பொழிய கண்கவர் வானவேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது ராஸ் அல் கைமா. இந்த 4 கி.மீ வானவேடிக்கை நிகழ்வு பைரோடெக்னிக் டிஸ்ப்ளேயுடன் (pyrotechnic dipsplay) நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு வாணவேடிக்கை நிகழ்வுகளில் ஏற்கனவே 5 உலக சாதனைகளை படைத்துள்ள ராஸ் அல் கைமா, இந்த ஆண்டு நீண்ட நேர் கோட்டு வானவேடிக்கை(longest straight line fireworks) நிகழ்வை நடத்தி உலக சாதனை படைக்க தயாராகி வருகிறது.
அல் மர்ஜன் தீவுக்கு (Al Marjan Island) அருகில் கடலுக்கு மேலே பல்வேறு வடிவங்கள் மற்றும் தீம்களில் பின்னணி இசையுடன் நடத்தப்பட உள்ள வானவேடிக்கை ராஸ் அல் கைமாவை ஒளிர செய்ய உள்ளது. தொற்று நீடிப்பதால் இந்த புத்தாண்டு நிகழ்வு குடியிருப்பாளர்கள் கூடி நின்று பார்க்கும் வகையில், பொது பார்வை பகுதிகள் இல்லாமல் நடைபெறும் என்று அமைப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நேரலை நேரம்..
வரும் டிசம்பர் 31-ஆம் தேதி இரவு 11.45 மணி முதல் குடியிருப்பாளர்கள் சமூக ஊடக சேனல்கள் மற்றும் raknye.com வழியே வானவேடிக்கையை கண்டு மகிழலாம். அல் ஹம்ரா வில்லேஜ் மற்றும் அல் மர்ஜன் தீவில் வானவேடிக்கையை காண பிரத்யேக வியூவிங் ஏரியா இடம்பெறும். இங்கு ஹோட்டல் விருந்தினர்கள், குடியிருப்பாளர்கள், சிறப்பு நிகழ்வு டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
சாலை மூடல் & கடற்கரை மூடல்..
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி அல் மர்ஜன் தீவுக்கு செல்லும் ஷேக் முகமது பின் சலீம் அல் காசிமி சாலை, வரும் டிசம்பர் 31 மதியம் 2 மணி முதல் மூடப்படும் என்றும். குடியிருப்பாளர்கள், ஹோட்டல் மற்றும் உணவகங்களின் விருந்தினர்கள் மற்றும் நுழைவு அனுமதி வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த சாலையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அதே போல அல் ஹம்ரா வில்லேஜ் – அல் மர்ஜன் தீவுக்கு நடுவே சாலையில் பொதுமக்கள் பார்க்கும் தளங்கள், அங்கிருக்கும் கடற்கரை பகுதி மற்றும் அல் ஹம்ரா வில்லேஜில் இருக்கும் மெரினா டவர்ஸுக்கு (Marina Towers) முன் உள்ள திறந்த கடற்கரை மூடப்படும். மேலும் விசிட்டர் பார்க்கிங், குழந்தைகளுக்கான பிளேயிங் ஏரியா பகுதிகளும் மூடப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.