UAE Tamil Web

துபாயின் தந்தையான ஷேக் ரஷீத்தின் 30 ஆம் ஆண்டு நினைவுதினம் – தனது தந்தைக்காக உணர்ச்சிப்பூர்வமான ட்வீட் ஒன்றினை வெளியிட்ட ஷேக் முகமது..!

Sheikh Rashid

அமீரகத்தின் வசந்தத்திற்கான கதவுகளை அகலத் திறந்துவைத்தவரும் துபாயின் தந்தை என அழைக்கப்படுபவருமான மறைந்த பெருமதிப்பிற்குரிய ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் (Sheikh Rashid bin Saeed Al Maktoum) அவர்களின் 30 வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

வாடையிலும் கோடையிலும் ஒரு லட்சிய தேசத்தை வென்றெடுக்க போராடியவரின் நினைவுநாளில் அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் தனது தந்தையின் நினைவாக உணர்ச்சிப்பூர்வமான கீழ்க்கண்ட ட்வீட்டை வெளியிட்டுள்ளார்.

வார்த்தைகளை சிக்கனமாகப் பயன்படுத்துபவர்,

ஆழக் கடல் போல அவரது சிந்தனைகள் இருந்தன.

மக்களுக்கான அவரது பயணம் துவங்கும் முன்னே – அவரிடத்தில்

பல ஆண்டுகளுக்கான லட்சியம் குடிகொண்டிருந்தது.

அவர் துபாயை நேசித்தார் போலவே தனது மனைவி லத்தீஃபாவையும், 

அமீரக ஒன்றியத்திற்கு விசுவாசியாக இருந்தார்,

அவருடைய ஆற்றல் மிகுந்த செயல்களால் இவ்வுலகத்தை நிரப்பிவிட்டு அமைதியாக வெளியேறிவிட்டார்.. 

1958 ஆம் ஆண்டு துபாயின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ஷேக் ரஷீத், 1990 ஆம் ஆண்டு அவர் இறக்கும் வரையிலும் அப்பதவியை சிறப்பாக மேற்கொண்டார். பெருமதிப்பிற்குரிய ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் (Sheikh Zayed bin Sultan Al Nahyan) அவர்களுடன் இணைந்து அமீரக ஒன்றியத்தை கட்டமைத்ததில் இவருடைய பங்கு அளப்பரியது.

இவரது சீரிய முயற்சிகளின் பலனாக 1960 ஆம் ஆண்டு துபாய் சர்வதேச விமான நிலையமும் 1972 ஆம் ஆண்டு ரஷீத் துறைமுகமும் 1978 ஆம் ஆண்டு துபாய் உலக வர்த்தக மையமும் ஜெபல் அலி துறைமுகம் 1979 ஆம் ஆண்டும் திறக்கப்பட்டன.

“மிகச்சிறந்த தலைவரான ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்களின் நினைவைப் போற்றுகிறேன். துபாய்க்காகவும் அதன் மக்களுக்காகவும் பல ஆக்கப்பூர்வமான திட்டங்களை முன்னெடுத்தவர். அவருடைய முயற்சிகளும் சாதனைகளும் எப்போதும் எங்களது நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும்” என துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum) அவர்கள் ட்வீட் செய்துள்ளார்.

துபாயின் ஆட்சியாளர் மற்றும் பட்டத்து இளவரசர் போலவே, ஷேக் ரஷீத் அவர்களின் புகைப்படத்தை ட்விட்டரில் தனது முகப்புப் படமாக வைத்துள்ளார் துபாயின் விளையாட்டு கவுன்சிலின் தலைவரான  ஷேக் மன்சூர் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikh Mansoor bin Mohammed bin Rashid Al Maktoum) தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட செய்தியில்,

“ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்களுடைய 30 வது நினைவு நாளில் அவருடைய தாரள குணத்தையும் சாதனையையும் நினைத்துப்பார்க்கிறேன். அவரது உள்ளார்ந்த சிந்தனையும், பணி மற்றும் சாதனை மீதான அவரது ஆர்வமும் துபாயின் தற்போதைய மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு நிச்சயம் ஒரு அடிப்படை தூணாக இருக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல அமீரக பாலின சமத்துவ கமிட்டியின் தலைவரான ஷேக்கா மனால் பிண்ட் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் (Sheikha Manal bint Mohammed bin Rashid Al Maktoum) அவர்களும் தனது ட்விட்டர் பக்கத்தில்,” எங்களுடைய வெற்றி மற்றும் சாதனைத் தருணத்தில் உங்களை நாங்கள் நினைவுகொள்கிறோம். உண்மையான ஞானத்திற்கும் வெற்றிக்கும் உருவமாக இருக்கும் அன்பான தந்தை நீங்கள். அதனாலேயே நீங்கள் எப்போதும் எங்களால், நாட்டு மக்களால் நினைவுகூரப்படுகின்றீர்” எனத் தெரிவித்துள்ளார்.


துபாயின் தந்தையான ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூம் அவர்களுடைய நினைவு தினத்தில் அவரைப் போற்றுகிறது UAE Tamil Web குழு.