UAE Tamil Web

அமீரக பாலைவனத்தில் ரகசியமாக தரையிறக்கப்பட்ட “மரண வியாபாரியின் மர்ம விமானம்” – 20 ஆண்டுகளாக விடை தெரியாமல் நீடிக்கும் வினா..!

umm al qwain flight

ராஸ் அல் கைமாவிற்குத் தெற்கே 30 கிலோமீட்டர் தூரத்தில், உம் அல் குவைனின் கோர் அல் பைதா பகுதிக்கு நீங்கள் சென்றிருந்தால் பாலைவனத்திற்கு நடுவே ஒரு விமானம் தனித்து நிற்பதைப் பார்த்திருக்கமுடியும். இருபது வருடங்களாக வெட்ட வெளியில், கொளுத்தும் வெயிலில், சுழலும் மணற் புயலில் தனித்து நிற்கும் இந்த விமானம் எப்படி அமீரகத்திற்கு வந்தது என்னும் கேள்விக்கு இதை நீங்கள் படிக்கும் இந்நேரம் வரையில் யாரிடமும் பதிலில்லை.

1999 ஆம் ஆண்டு திடீரென ஒருநாள் இந்த விமானம் கோர் அல் பைதாவில் தரை இறக்கப்பட்டிருக்கிறது. அதுவும் பாலைவனத்தில் லேண்டிங் செய்திருக்கிறார்கள். யார் இதனை ஓட்டிவந்தது? எங்கிருந்து ஓட்டிவந்தார்கள்? என்பதற்கு அரசு சார்பில் எவ்வித அதிகாரப்பூர்வ தகவலுமில்லை. 90 களின் இறுதியில் ஆப்பிரிக்க நாடுகளை அலறவிட்ட ஆயுத வியாபாரி விக்டர் போட் தான் இந்த விமானத்தின் உரிமையாளர். விக்டர் இப்போது இருப்பது அமெரிக்க ஜெயிலில். தன்னுடைய 25 வருட சிறைத்தண்டனையை அவர் அங்கே கழித்துவருகிறார். விக்டருக்கு மரண வியாபாரி என்ற புகழ்பெற்ற பட்டப்பெயரும் உண்டு என்ற தகவலைத் தெரிந்துகொண்டு அடுத்த பாராவிற்குச் செல்லவும்.

umm al qwain flight6
Image Credit: John Dennehy / The National

எங்கே விட்டேன்..? ஆம்.. அந்த விமானம்.. இப்படி அமீரகத்தின் முக்கிய இடமாக மாறிப்போன இந்த கைவிடப்பட்ட விமானத்தின் வரலாறுகளைப் புரட்டிப் பார்த்தால், கொஞ்சம் திக்கென்று தான் இருக்கிறது. ஏரோ ட்ரான்ஸ்போர்ட் டேட்டா பேங்க் (Aero Transport Data Bank) நிறுவனம் அளித்த தகவலின்படி 1975 ஆம் ஆண்டு உஸ்பெஸ்கிஸ்தான் பகுதியில் இந்த விமானம் தயாரிக்கப்பட்டது. அப்போது இதற்கு வைக்கப்பட்ட பெயர் Ilyushin Il-76. சோவியத் யூனியன் என்னும் குடையின் கீழ் உஸ்பெஸ்கிஸ்தான் இருந்த நேரம் அது. அதன்பின்னர் கீழே விழுந்த பீங்கான் கிண்ணம் போல சோவியத் யூனியன் சிதற, ரஷ்யாவின் ராணுவத்தில் இந்த விமானம் சேர்த்துக்கொள்ளப்பட்டது.

ராணுவத்தில் சரக்குகளை (நீங்கள் நினைப்பதல்ல) அதாவது பொருட்களை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்பட்ட இந்த விமானத்தை விற்க ரஷிய அரசு முடிவு செய்தது. 1990 களின் முற்பகுதியில் விமானத்தை வாங்கினார் ரஷியாவைச் சேர்ந்த செர்கை போட். போன பாராவுக்கு முந்தைய பாராவில் நீங்கள் சந்தித்த விக்டர் போட்- ன் சகோதரர் தான் இந்த செர்கை போட். இப்போது இதற்குப் பின்னால் இருக்கும் கனெக்ஷன் புரிகிறதா?

ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புப் பிரிவு விக்டரை கண்காணிக்கத் துவங்கிய நேரம். நேரடியாக விமானத்தின் உரிமையாளராக இருப்பது சொந்த செலவில் ஆப்பு வைப்பது போல ஆகிவிடும் என யோசித்த விக்டர், விமானத்தினை கைமாற்ற நினைத்தார். சொப்பன சுந்தரி கணக்காக கைமாறிக்கொண்டிருந்த இந்த விமானம் மீண்டும் ஒருமுறை ஏர் பாஸ் எனப்படும் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது.

umm al qwain flight 5
Image Credit: John Dennehy / The National

ஆனாலும் விக்டரின் கூட்டாளிகள் மூலமாக சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்ட இந்த விமானத்தை தடை செய்வதாக தென்னாப்பிரிக்க சிவில் போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்தது. அதன்பின்னர் சென்ட்ரா ஆப்பிரிக்கன் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தை வாங்கியதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குப் பின்னாலும் விக்டரின் திட்டம் இருப்பதை ஐநா விரைவிலேயே கண்டுபிடித்தது.

லைபீரியாவிற்கு ஆயுதங்களை கொண்டுசெல்ல இந்த விமானத்தை பயன்படுத்தியதாக விக்டரை குற்றம் சாட்டியது ஐநா. மத்திய ஆப்பிரிக்காவில் இருந்து பல நாடுகளின் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை விமானம் மூலமாக கடத்தியதை ஆதாரங்களுடன் முன்வைத்தது ஐநா.

விக்டரின் இந்த கறுப்புப் பக்கம் காரணமாக அமீரகத்திற்குள் நுழைய 2000 ஆம் ஆண்டிற்கு முன்னர் தடை விதிக்கப்பட்டது. ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் அரசுகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த விக்டரின் சாம்ராஜ்யம் சரியத் துவங்கியது. சரி, விமானம் என்ன ஆச்சு? 1999 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2000 த்தின் துவக்கத்தில் சென்ட்ரா ஆப்பிரிக்கன் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தை கைவிடுவதாக அறிவித்தது. விக்டரின் பல ரகசிய கடத்தல் வேலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த விமானம் குறித்த கடைசி அதிகாரப்பூர்வ தகவல் இதுதான்.

umm al qwain flight 4
Image Credit: John Dennehy / The National

அதன்பின்னர் விமானம் எங்கிருந்து கிளம்பி உம் அல் குவைனுக்கு வந்து தரையிறங்கியது என்பது குறித்து எந்த அரசிடமும் தகவல் இல்லை. அதன்பின்னர் ஐநாவின் நடவடிக்கையால் சென்ட்ராஆப்பிரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனமும் மூடப்பட்டது.

இந்த விமானம் பற்றிச் சொல்லப்படும் கருத்துகளுள், கைவிடப்பட்ட விமானத்தை விக்டருடன் தொடர்புடைய பால்மா பீச் ஹோட்டல் நிர்வாகம் விளம்பரமாக பயன்படுத்த இருந்தது என்பது முக்கியமானதாகும். அதேபோல விமானத்தை காப்பி ஷாப்பாக மாற்றவும் ஒருவர் ஆசைப்பட்டு பின்னர் அது கைவிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

umm al qwain flight 1
Image Credit: John Dennehy / The National

வீழ்ந்த விக்டரின் சாம்ராஜ்யம்

ரஷியாவில் கம்யூனிசத்தை தகர்க்க பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டதாகவும் விக்டரின் மீது புகார் இருக்கிறது. அதன்பின்னர் கொலம்பியாவின் அமெரிக்க எதிர்ப்பு படைகளுக்கு சட்ட விரோதமாக ஆயுதங்களை விற்பனை செய்ததாக அமெரிக்க அரசு அவர்மீது குற்றம் சாட்டியது. இப்படி வல்லரசுகளை பகைத்துக்கொண்ட விக்டர் கடந்த 2008 ஆம் ஆண்டு தாய்லாந்தில் கைது செய்யப்பட்டார்.

விக்டர் போட்

victor-bout-russia-
Image Credit: Newsweek

கைது நடவடிக்கைக்குப் பின்னர் அமெரிக்க அரசு இருந்தது என்பதை சொல்லவேண்டியதில்லை. 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது அமெரிக்க நீதிமன்றம். அவரை விடுங்கள். ஒருகாலத்தில் பல சம்பவங்களைச் செய்த இந்த விமானம் இப்போது நடு பாலைவனத்தில் தேமேவென்று நிற்கிறது. அதன் இறக்கைகளில் பறவைகள் கூடுகட்டி வசித்துவருகின்றன. உம் அல் குவைன் பக்கமாகச் சென்றால் இந்த விமானத்தைக் காணத் தவறாதீர்கள்.

umm al qwain flight
63 Shares
Share via
Copy link