UAE Tamil Web

சாலை விபத்தில் படுகாயமடைந்த வாலிபர்.. மீட்பு ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் சேர்ப்பு

Accident

அமீரகத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் படுகாயமடைந்த 29 வயதான எமிராட்டி ஒருவர், சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். உம் அல் குவைனில் உள்ள ஷேக் முகமது பின் சயீத் சாலையில்(Sheikh Mohammed bin Zayed road) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

- Advertisment -

காரை ஓட்டி வந்த அந்த 29 வயதான எமிராட்டி, ராஸ் அல் கைமாவிற்கு செல்லும் வழியில், எக்ஸிட் நம்பர் 90-க்கு(Exit No. 90) அருகில் வந்த போது தனது ஸ்டீயரிங் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நேரிட்டதாக, போக்குவரத்து மற்றும் ரோந்து துறை இயக்குனர்(உம் அல் குவைன் காவல்துறை), கர்னல் சயீத் ஒபைத் பின் அரன்(Saeed Obaid bin Aran) கூறியுள்ளார்.

சாலை விபத்தில் படுகாயமடைந்த அந்த வாலிபர், ராஸ் அல் கைமாவில் உள்ள ஷேக் கலீஃபா மருத்துவமனைக்கு(Sheikh Khalifa Hospital) சிகிச்சைக்காக ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டார். இது பற்றி மேலும் தகவல் தெரிவித்துள்ள அதிகாரி சயீத் ஒபைத், இன்று காலை சுமார் 10.20 மணியளவில் இந்த விபத்து குறித்த தகவல் தங்களுக்கு தெரிய வந்ததாகவும், சம்பவ இடத்திற்கு உடனடியாக போக்குவரத்து ரோந்து அதிகாரிகள் அனுப்பப்பட்டதாகவும் கூறினார். பின்னர் அவசர மருத்துவ சேவைகளுக்கு பயன்படுத்தப்படும் மீட்பு ஹெலிகாப்டர் வரவழைக்கப்பட்டு, படுகாயமடைந்த நபர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து வாகனத்தை வேகமாகவோ அல்லது கவனக்குறைவாகவோ ஓட்டியதால் நடந்திருக்கலாம் என்றும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார். அனைத்து ஓட்டுனர்களும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும், வேகத்தை தவிர்த்து கொள்ள வேண்டும், முக்கியமாக வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் மறக்காமல் அணிய வேண்டும் என்றும் அதிகாரி சயீத் ஒபைத் அறிவுறுத்தியுள்ளார்.