துபாயில் நிதி தகராறு காரணமாக தனது ரூம் நண்பரை அடித்துக் கொலை செய்த 28 வயது இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கு விசாரணையின்படி, பணத் தகராறு காரணமாக அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர் தனது ரூமில் ஒன்றாக இருந்த நண்பரை தாக்கியதாக போலிஸ் அறிக்கை தாக்கல் செய்தது.
பாதிக்கப்பட்டவருக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையேயான ஏற்பட்ட தகராறை தடுக்க ரூமில் இருந்தவர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் இதற்கிடையில் குற்றம் சாட்டப்பட்ட நபர் பாதிக்கப்பட்டவரின் தலையில் தாக்கியதால், அவர் சுயநினைவை இழந்து கீழே விழுந்துள்ளார். பின்னர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துவிட்டார்.
இதனையடுத்து கொலை வழக்கில் அரபு நாட்டைச் சேர்ந்த அந்த குற்றவாளிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து துபாய் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது, மேலும் குற்றவாளியின் தண்டனைக் காலம் முடிந்த பிறகு நாடு கடத்தவும் தீர்ப்பளித்தது.