பேருந்து, மெட்ரோ, டிராம் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை பள்ளிக்கல்லூரி மாணவர்களிடையே ஊக்கப்படுத்தும் விதமாக புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டிருக்கிறது துபாய் போக்குவரத்து ஆணையம். வீட்டில் இருந்து பள்ளிக்கல்லூரிகளுக்கு அடிக்கடி மெட்ரோ மற்றும் டிராமில் பயணிக்கும் மாணவர்களின் பட்டியலை துபாய் போக்குவரத்து ஆணையம் தயார் செய்துள்ளது. இதில் அதிகமாக பொதுப்போக்குவரத்தை பயன்படுத்திய மாணவர்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு லேப்டாப்களை பரிசாக வழங்கி ஆச்சரிப்படுத்தியுள்ளது துபாய் போக்குவரத்து ஆணையம். நூன், HP உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் லேப்டாப் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. துபாயில் பொதுபோக்குவரத்தை பயன்படுத்த மக்களை ஊக்கப்படுத்தும் விதமாக இதுபோன்ற முன்னெடுப்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் உள்ள பொதுப்போக்குவரத்தை எளிதில் பயன்படுத்தும் விதமாக மாணவர்களுக்கு ப்ளூ நோல் கார்ட் 50% தள்ளுபடியில் வழங்கப்படும் எனவும் மூத்த குடிமக்கள் இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம் என துபாய் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
