அமீரகத்தில் கட்டிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு தங்குமிடத்தை இலவசமாக வழங்கவும் அமீரகத்தின் மனிதவள அமைச்சகம் புதிய ஆணை பிறப்பித்துள்ளது.
இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 50 -க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாத ஊதியமும் 1,500 திர்ஹம்ஸுக்கும் குறைவாக இருந்தால் நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு தங்குமிடத்தை இலவசமாக வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
தொழிலாளர்கள் 100 அல்லது அதற்கும் அதிகமாக நிறுவனங்களில் பணிபுரிந்தால், கட்டிட பணியிடத்தில் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கட்டுமானத் தளங்களில் அரசு வகுத்துள்ள பாதுகாப்பு நடைமுறைகள் நிறைவேற்றப்பட வேண்டும். மேலும் அதனை உறுதி செய்ய சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
பணியிடத்தில் ஏற்படும் காயங்களில் இருந்து தொழிலாளர்களை பாதுகாக்க அவர்களுக்கு பொருத்தமான ஆடைகள் வழங்கப்பட வேண்டும். முதலுதவி பெட்டிகள் மற்றும் தீயை அணைக்கும் கருவிகள் கட்டுமான வளாகத்தில் வைக்கப்பட வேண்டும் என்றும் நிறுவன முதலாளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தேவைப்படும் போது தொழிலாளர்களுக்கு முதலுதவி வழங்குவதற்காக கட்டுமான தளத்தில் ஒரு முதலுதவி அளிக்கும் நிபுணர் பணியில் இருக்க வேண்டும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பு மற்றும் தடுப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் மீட்பு உதவிக்குறிப்புகளை தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் விதமாக அரபி மொழியிலும் பிற மொழிகளில் போர்டுகளில் தெளிவாக விவரிக்கும்படி வைக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
கட்டுமான தளங்களில் வழக்கமான அடிப்படையில் ஆய்வுச் சோதனைகள் நடத்தப்படும் என்றும், மீறும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் மனிதவள அமைச்சகம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் பணிபுரியும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை மீறும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் அபராதம் விதிக்கும் உரிமையை புதிய தொழிலாளர் சட்டம் வழங்குகிறது.