சிகிச்சை பலனின்றி சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் காலமானார்.!

Sarava Bhavan owner passed away

உடல் நிலை சரியில்லாத சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்றிய நிலையில் சிகிச்சை பலனின்றி சென்னையில் காலமானார்.

கடந்த 9ஆம் தேதி ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் சரண் அடைந்த ராஜகோபால் சிறைக்கே செல்லாமல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

மருத்துவமனையில் சிறைக் கைதிகளுக்கான சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த ராஜகோபாலுக்கு 71 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக உடல் உறுப்புகள் பல செயலிழந்த நிலையில் வெண்டிலேட்டரில் வைத்து செயற்கை சுவாசம் மூலம்தான் ராஜகோபால் சுவாசித்துக் கொண்டு இருந்தார்.

இந்நிலையில் போதிய வசதி இல்லை என்பதால் ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து அவரது மகன் சரவணன் ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளிக்கவேண்டும் என்று உயிர்நீதிமன்றத்திடம் மனு அளித்திருந்தார். மனுவை ஏற்ற நீதிமன்றம் அவரை மாற்ற அனுமதி அளித்தது.

இதனை அடுத்து ராஜகோபால் நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். நீதிமன்ற உத்தரவின்போதே ஸ்டான்லி மருத்துவமனையின் டீன், வெண்டிலேட்டரில் இருக்கும் ஒருவரை இடமாற்றம் செய்வது மிகவும் ஆபத்தானது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

சரவணபவன் ஹோட்டல் உரிமையாளர் ராஜகோபால் ஜோசியர் கூறியதால் தனது ஹோட்டலில் பணிபுரிந்த ஊழியரின் மகளான ஜீவஜோதியை 3-வது மனைவியாக திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டார். இதற்காக ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமாரை கூலிப்படை மூலம் கடத்தி கொடைக்கானல் மலை பகுதியில் வைத்து கொலை செய்த வழக்கில் ராஜகோபால் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த வழக்கின் விசாரணை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. வழக்கில் முக்கிய குற்றவாளியான ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம்.

மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட அவரது கூட்டாளிகள் 8 பேருக்கும் 9 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து ராஜகோபால் வழக்கை நடத்தி வந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கில் கடந்த மார்ச் மாதம் தீர்ப்பு வந்தது.

அதன்படி, உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை 6 பேருக்கும் உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து ஜூலை 7-ஆம் தேதிக்குள் ராஜகோபால் உள்ளிட்ட 6 பேரும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்கு செல்ல வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கெடு விதித்திருந்தது. அதன்படி சென்ற வாரம் ராஜகோபால் உடல் நிலை சரியில்லாதபோதும் ஸ்ட்ரெச்சரில் அழைத்துவரப்பட்டு சரணடைந்தார்.