UAE Tamil Web

கடலில் மிதக்கும் சொகுசு ஹோட்டல் – துபாயில் நிகழ இருக்கும் அற்புதம் – பிரம்மிக்கவைக்கும் புகைப்படங்கள்..!

seagate hotel

அமீரகத்தின் மண்ணில் முடியாது நடக்காது என்ற வார்த்தைகளுக்கு எப்போது மதிப்பிருந்ததில்லை. உலக நாடுகள், தொழில்நுட்ப ஜாம்பவான்கள் தொட யோசிக்கும் விஷயங்களில் கூட இறங்கி அடிக்கும் வல்லமை அமீரகத்திற்கு உண்டு. இதற்கு சாட்சி சொல்லவே கட்டப்பட்டுவருகிறது மிதக்கும் சொகுசு ஹோட்டல்.

- Advertisment -

நீங்கள் படித்தது சரிதான். கடலில் மிதக்கும் பிரம்மாண்ட ஹோட்டல். அதனைச்சுற்றி 6 சொகுசு வில்லாக்கள். கேட்கவே அதகளமாக இருக்கிறதல்லவா? இதனை சீகேட் ஷிப்யார்ட் மற்றும் எல் பராவி குழுமம் இணைந்து கட்டிவருகின்றன.

600 மில்லியன் திர்ஹம்ஸ் செலவில் துபாய் மெரினாவில் இன்னும் சில மாதங்களில் துவங்கப்பட இருக்கும் இந்த சொகுசு மிதக்கும் உணவகத்தைச் சுற்றி கட்டப்பட்டுவரும் வில்லாக்களுக்கு நெப்டியூன் என நாமகரணம் சூட்டப்பட்டுள்ளது. வாருங்கள் இந்த நெப்டியூன் வில்லாவைப் பற்றி கொஞ்சம் பார்த்துவிடலாம்.

வீடா? கப்பலா?

இரண்டடுக்கு தளம். ஒவ்வொன்றும் 300 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டவை. நான்கு சூட் ரூம்கள், பால்கனி, நீச்சல் குளம், மிகப்பெரிய சமையலறை, பணியாளர்களுக்கான 2 அறைகள் என தெறிக்கவிடும் இந்த வில்லாவை பிரபல சொகுசுக் கார் தயாரிப்பு நிறுவனமான ஆஸ்டன் மார்டின் வடிவமைத்திருக்கிறது.

இவையெல்லாவற்றுக்கும் மேலே, வில்லாவின் அடிப்பகுதி முழுவதும் கண்ணாடியால் தயாரிக்கப்பட்டுள்ளது. கடலின் உட்புறத்தை கண்டுகளித்தபடி, நம்மால் இதில் பயணிக்க முடியும்.

மொத்தமாக 900 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த வில்லாவை நீங்கள் உலகின் எந்தப் பகுதிக்கும் ஓட்டிச்செல்லலாம். எப்படி வாங்குவது? உங்களிடம் 20 மில்லியன் திர்ஹம்ஸ் பணம் இருந்தால் போதும். மிதக்கும் சொர்க்கம் உங்களின் கையில்.

தானாகவே சுத்திகரிப்பு செய்யும் வசதி, காற்று தூய்மைப்படுத்தும் வசதி, கழிவுநீர் மேலாண்மை வசதி என அடுக்கடுக்காக வசதிகளை அளிக்கும் இந்த வில்லா சோலார் மூலம் தனக்கான ஆற்றலைப் பெறுகிறது.

பாதி யாச்சட் (சொகுசுப் படகு) பாதி வில்லா என வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த மிதக்கும் வீடு ஷாஃப்ட் மோட்டார் மூலமாக இயக்கப்படும் போது, அலைகளின் அதிர்வு உள்ளே தெரியாமல் இருப்பதற்காக, ஹைட்ராலிக் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. கப்பல் மாதிரி வீடு என்பது இதுதானோ?

பணிகள் நிறைவு

“வில்லாக்கள் கட்டும் பணிகள் 95 சதவிகிதம் நிறைவடைந்திருக்கின்றன. இவைபோக இத்திட்டத்தின் மொத்த வேலைகளில் 65 சதவிகிதம் பூர்த்தியாகியிருக்கின்றன. அடுத்த மாதத்திற்குள் அனைத்து வேலைகளும் நிறைவடையும். இந்த வில்லாவை நாங்கள் யாச்சட் எனவே பதிவுசெய்திருக்கிறோம். வில்லாக்களின் நடுநாயகமாக அமைய இருக்கும் பிரம்மாண்ட உணவகத்தை எங்களுடைய நிறுவனமே நிர்வகிக்கும்” என அல் பராவி குழுமத்தின் தலைவர் அல் பராவி தெரிவித்தார்.

முதல் ஓனர்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த சொகுசு வில்லாவின் அறிமுக விழா நடைபெற்றது. அப்போதே முதல் நெப்டியூனை துபாயைச் சேர்ந்த தொழிலதிபரான பல்விந்தர் சஹ்னி என்பவர் வாங்கியிருக்கிறார்.

நெப்டியூன் புகைப்படங்கள்

Neptune villa
Image Credit: thenationalnews
Neptune villa
Image Credit: thenationalnews
Neptune villa
Image Credit: thenationalnews
Neptune villa
Image Credit: thenationalnews
Neptune villa
Image Credit: thenationalnews