ஷார்ஜாவின் அல் தைத் நகராட்சியில் எமிராட்டிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு கொடுக்கப்பட வேண்டும் என உச்ச சபையின் உறுப்பினரும் ஷார்ஜாவின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய டாக்டர். ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி உத்தரவிட்டுள்ளார்.
இதனை அல் தைத் நகராட்சியின் இயக்குனர் அலி முஸாபா அல் துனாஜி அவர்களும் உறுதி செய்துள்ளார். அல் தைத் பகுதி மக்களின் பாதுகாப்பையும் தனியுரிமையையும் உறுதிபடுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஷார்ஜா தொலைக்காட்சி மற்றும் ரேடியோவின் நேரலையில் பேசிய பெண் ஒருவர், குடியிருப்பாளர்கள் தெருக்களில் நின்று அநாகரீகமாக நடந்துகொள்வதால் பெண் குழந்தைகளுடன் வெளியே செல்லவே அச்சமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து அப்பகுதியில் தங்கியிருந்த பேச்சுலர்கள், தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், வருங்காலத்தில் அல் தைத் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அப்போது ஆட்சியாளர் அறிவித்திருந்தார்.
அதன் அடிப்படையிலேயே இந்த அறிவிப்பு வெளிவந்திருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.