UAE Tamil Web

ஷார்ஜாவில் விடுமுறை நாட்களில் இலவச பார்க்கிங் சேவை ரத்து..!

parking

ஷார்ஜாவில் விடுமுறை நாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இலவச பார்க்கிங் முறை இருந்துவந்த நிலையில் தற்பொழுது எல்லா நாட்களிலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஷார்ஜா நகராட்சி சனிக்கிழமை (நேற்று) அறிவித்துள்ளது.

ஷார்ஜாவில் இருக்கும் ஏறக்குறைய 6000 வாகன நிறுத்துமிடங்களில் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இனி அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஏன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றால் விடுமுறை நாட்களில் மற்ற பகுதியிலிருந்து வரும் பொதுமக்கள் இந்த இலவச பார்க்கிங்கை பயன்படுத்துகின்றனர். இலவச பார்க்கிங் என்பதால் அதிக நேரம் வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுவிடுகின்றனர். இதனால் அந்தந்த பகுதியிலேயே குடியிருக்கும் மக்களுக்கு அவர்களது வாகனத்தை நிறுத்த முடியாத சூழல் நிலவுகிறது.

இதையடுத்து விடுமுறை நாட்கள் உட்பட அனைத்து நாட்களிலும் கட்டணம் வசூலிக்கப்பட்டால் மற்ற பகுதியிலிருந்து வரும் மக்கள் தேவையின்றி வாகனத்தை நிறுத்த மாட்டார்கள். இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வாகனத்தை நிறுத்த இடம் கிடைக்கும் என்ற காரணத்தினால் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஷார்ஜாவில் 5857 வாகன நிறுத்துமிடங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், நகரம் முழுவதும் உள்ள 579 ப்ளூ பார்க்கிங் தகவல் பலகைகள் மூலம் வாகன ஓட்டிகள் வாகன நிறுத்துமிடங்களை சரிபார்த்து கண்டறியலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பாளர்கள் விடுமுறை தினங்களில் வாகன நிறுத்துமிடங்களை பயன்படுத்துவதற்கு முன்பு அது எந்த வகையான பார்க்கிங் என்பதை சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண பார்க்கிங் முறையானது (விடுமுறை நாட்களை தவிர்த்து) 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் இவ்வாறான பிரச்சினைகள் இருக்கும் காரணத்தினால் பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க எல்லா நாட்களிலும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த சந்தேகங்களுக்கு 993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.shjmun.gov.ae என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

parking
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap