UAE Tamil Web

ஒரே பாணியில் இருவரிடம் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்..! மடக்கி பிடித்த ஷார்ஜா காவல்துறை..!

robbery

இரண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு கும்பலை ஷார்ஜா காவல்துறை கைது செய்துள்ளது.

- Advertisment -

இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அரபு நாட்டைச் சேர்ந்த மூன்று பேரை ஷார்ஜா காவல்துறை ஜெனரல் கமெண்டிங் குற்றப்புலனாய்வு துறை லாபகரமாக பிடித்துள்ளது. பிடிபட்ட இந்த கும்பலின் தலைவன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வெளியே வசிப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

ஷார்ஜா போலீசாருக்கு வந்த இரண்டு தனித்தனி புகார்களை ஆராய்ந்து பார்த்த போலீசார் இரண்டு புகார்களிலும் ஒரே மாதிரியாக கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்துள்ளனர்.

முதல் புகாரில் பாதிக்கப்பட்டவர் வாகனத்தில் இருக்கும் போது அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

முதல் புகார் குறித்து கர்ணல் உமர் சுல்தான் கூறும்போது, அமீரகத்திற்கு வெளியே இருக்கும் நபர் ஒருவரிடம் கார் ஒன்று வாங்குவதற்காக விலை பேசியிருக்கிறார் பாதிக்கப்பட்டவர். காரை விற்பதாக கூறிய நபரும் பாதிக்கப்பட்டவர் கூறிய விலைக்கு சம்மதித்துள்ளார்.

அதுமட்டுமின்றி எனக்கு பதிலாக வேறு ஒருவர் உங்களை பார்க்க வருவார் என்றும், அவரிடம் பணத்தை ஒப்படைத்து விட்டு இந்த வியாபாரத்தை முடிவுக்கு கொண்டு வருவோம் என்றும் அமீரகத்திற்கு வெளியே இருக்கும் நபர் கூறியுள்ளார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட நபரும், காரை விற்பனை செய்வதாக கூறிய நபர் அனுப்பிய மற்றொரு நபரும் பேசி வைத்த குறிப்பிட்ட இடத்திற்கு வந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர் வந்தவரிடம் காருக்குள் இருந்தவாரே தன்னிடம் உள்ள பணத்தை காட்டியுள்ளார். பணத்தை காண்பித்த மறுகணமே கையிலிருந்த பணத்தை மிக வேகமாக பிடுங்கிக் கொண்டு வேகமாக ஓடிச்சென்று தூரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஏறி கொள்ளையன் தப்பித்துள்ளான் என்று முதல் புகார் வந்துள்ளதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறும்போது இதே போன்று மற்றொரு புகாரும் புஹைரா காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. அதிலும் கொள்ளையர்கள் இதே பாணியிலேயே கொள்ளையடித்தது தெரியவந்தது என்று அவர் கூறினார்.

இதையடுத்து தேடுதல் வேட்டையில் இறங்கிய காவல்துறையினர் குற்றவாளிகளை மடக்கி பிடித்தனர். பிடிபட்ட இந்த மூன்று குற்றவாளிகளும் செய்த குற்றத்தை ஒப்புக் கொண்டதோடு, அமீரகத்திற்கு வெளியே இருந்த தங்கள் தலைவனுக்கு பணத்தை எவ்வாறு கைமாற்றினார்கள் என்பது குறித்து போலீசாரிடம் தெரிவித்தனர். கொள்ளையர்கள் தங்கள் தலைவனிடம் கொடுத்தது போக கையில் வைத்திருந்த மீதமுள்ள பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை மேல் கட்ட நடவடிக்கைகளுக்காக ஷார்ஜா பொது வழக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கர்னல் உமர் சுல்தான் கூறுகையில், இது மாதிரியான குற்றவாளிகள் மற்றும் மோசடி கும்பலுக்கு பலியாகாமல் இருக்க அடையாளம் தெரியாத நபர்களிடம் எவ்வித பண பரிமாற்றத்தையும் மேற்கொள்ள வேண்டாம், சர்வதேச தொலைபேசி எண்கள் மூலமாகவோ அல்லது சமூக வலைதளம் மூலமாவோ தொடர்பு கொள்ளும் இவ்வாறான நபர்களை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அவர்களிடம் தங்களின் சொந்த தனிப்பட்ட தகவல்களையும், அடையாள சான்றுகளையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது .

அதுமட்டுமின்றி அதிக பணத்தை மொத்தமாக கையில் வைத்திருப்பது இது போன்ற கொள்ளை சம்பவத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.