UAE Tamil Web

ஷார்ஜா: தூக்கிவீசப்பட்ட போலீஸ் கார் – உடல் நசுங்கி காவல்துறை அதிகாரி மரணம் – கண்ணீரில் காவல்நிலையம்..!

Car-crash-that-resulted-in-the-officer-s-death

ஷார்ஜா: இன்று காலை 10 மணிக்கு மிலேய்ஹா சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தை வேகமாக வந்த கார் ஒன்று பலமாக மோதியிருக்கிறது. இதில் காவல்துறையின் வாகனத்தில் உள்ளே அமர்ந்திருந்த முதல்நிலை அசிஸ்டன்ட் ரஷீத் அல் அல்பாஹி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை பெண் ஒருவர் ஓட்டிச்சென்றிருக்கிறார். வேகமாக வந்த கார் காவல்துறை வாகனத்தின் பின்னால் பலமாக மோதியிருக்கிறது. இதனால் போலீஸ் கார் தூக்கி வீசப்பட்டதில் கடுமையாக அவ்வாகனம் சேதமடைந்திருக்கிறது.

இதனையடுத்து ஷார்ஜா காவல்துறையின் பொது கட்டளைப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஷார்ஜா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்துப் பிரிவில் பணியாற்றிவந்த முதல்நிலை அசிஸ்டன்ட் ரஷீத் அல் அல்பாஹி இன்று நிகழ்ந்த கோர விபத்தில் மரணமடைந்தார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக ஷார்ஜா காவல்துறையில் பணியாற்றிவந்த ரஷீத், நேர்மைக்கும் கண்ணிய உழைப்பிற்கும் பெயர்பெற்றவர் என அவரது அன்பர்களும் சக பணியாளர்களும் தெரிவிக்கின்றனர். திருமணமாகி அவருக்கு குழந்தைகள் இருப்பதாக அவரது நண்பர்கள் கூறினர்.

உயிரிழந்த ரஷீத்தின் நினைவுகளையும், அவருக்கான அஞ்சலிக் குறிப்பையும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

ரஷீத்தின் இறுதி சடங்குகள் ஷார்ஜாவில் உள்ள அல் ஷஹாபா மசூதியில் நடைபெற்று ஷார்ஜா கல்லறையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரித்திருக்கின்றனர்.

பெருந்தொற்றுக் காலம் என்பதால் போன் மூலமாகவே இரங்கல் செய்தி தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த வழக்கினை அல் சியோத் காவல்நிலையம் விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பொது உயிரிழந்த காவல்துறை அதிகாரியின் மரணத்திற்கு UAE Tamil Web ஆசிரியர் குழு இரங்கல் தெரிவிக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் தடுக்க, வேகக்கட்டுப்பாட்டையும் சாலை விதிகளையும் அனைவரும் கடைபிடிக்கவேண்டும் என நாங்கள் கனத்த மனதுடன் வலியுறுத்துகிறோம்.

Car-crash-that-resulted-in-the-officer-s-death
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap