உலகம் போற்றும் கவிஞர்களின் வரிசையில் என்றும் நிலைத்திருக்கக் கூடியவர் கவிஞர் கலீல் ஜிப்ரான். லெபனானிய- அமெரிக்கா எழுத்தாளரான இவரது கவிதைகள், கதைகளின் தாக்கம் உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கின்றன. 1883ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி லெபனான் நாட்டில் உள்ள ஷர்ரீ எனும் கிராமத்தில் பிறந்தார். ஜிப்ரான் கவிஞர் மட்டுமல்லாமல் சிறந்த ஓவியரும் ஆவார். இந்த நிலையில் கலீல் ஜிப்ரானின் பிறந்தநாளையொட்டி ஷார்ஜாவில் அவரது ஓவியங்கள் நிரம்பிய பிரத்யேக கண்காட்சி நேற்று முதல் தொடங்கப்பட்டது. இதனை ஷார்ஜா ஆட்சியாளர் பெருமதிப்பிற்குரிய டாக்டர் சுல்தான் பின் முகமது அல் காசிமி திறந்து வைத்து கலீல் ஜிப்ரானின் அசல் ஓவியங்களை கண்டு களித்தார்.
ஆன்மாவின் ஜன்னல் கலீல் ஜிப்ரான் என்ற கருப்பொருளுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த கண்காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி 6ம் தேதியுடன் நிறைவு பெறும். இதில் ஜிப்ரானின் 34 அசல் ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் அவர் பயன்படுத்திய எழுதுகோல், மரச்சாமான்கள் உள்ளிட்ட அவரது பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலீல் ஜிப்ரானின் பிரசுரிக்கப்படாத புத்தகங்கள் மற்றும் ஓவியங்கள் அடங்கிய தொகுப்பு ஷார்ஜா ஆட்சியாளர் முகமது அல் காசிமி அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. கண்காட்சிக்கு மக்கள் எளிதில் வந்து செல்லும் வண்ணம் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
