UAE Tamil Web

அப்பார்ட்மெண்ட்டின் முதல் மாடியிலிருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தை.!

sharjah

ஷார்ஜாவில் அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியிலிருந்து விழுந்த 4 வயது அரபு சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளான். கடந்த 5 நாட்களுக்கு முன்பு அல் புஹைரா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

- Advertisment -

அந்த சிறுவன் தனது குடும்பத்தினருடன் தங்கியிருக்கும் கட்டிடத்தின் பால்கனியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பொருளை எடுக்க முயன்ற போது தவறி கீழே விழுந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. குடும்ப உறுப்பினர்களை விசாரித்த பின், இந்த சம்பவத்தின் பின்னால் எந்தவொரு குற்றநோக்கமோ அல்லது அலட்சியமோ இல்லை என்பது கண்டறியப்பட்டது. எனவே இது ஒரு விபத்து தான் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அல் புஹாரியா காவல் நிலைய இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் அப்துல்லா சலீம் அல் நக்பி சம்பவம் பற்றி பேசும் போது,”அப்பார்ட்மெண்ட் ஒன்றின் முதல் மாடியிலிருந்து ஒரு குழந்தை விழுந்து விட்டதாக எங்களுக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. இதனை அடுத்து சிஐடி(CID) அதிகாரிகள், ரோந்து மற்றும் தேசிய ஆம்புலன்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய குழு ஒன்று சம்பவ இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டது” என்றார்.

நேரில் சென்ற அந்த குழு சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றது. பின் அல் புஹாரியா காவல் நிலையத்திலிருந்து, அதிகாரி அல் நக்பி தலைமையிலான ஒரு போலீஸ் குழு, மருத்துவமனையில் இருந்த குழந்தையின் உடல்நிலையை அறிய சென்றது.

அப்போது ஷார்ஜா காவல்துறையினரின் விரைவான நடவடிக்கைக்கு சிறுவனின் தந்தை நன்றி தெரிவித்தார். குழந்தையின் ஆரோக்கியத்தை தொடர்ந்து கண்காணித்ததற்காக போலீஸாருக்கு பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்.

இதனிடையே அசம்பாவிதங்கள் நிகழாமல் குழந்தைகளை எப்போதும் விழிப்புடன் பார்த்து கொள்ளுமாறு சமூக உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களை அதிகாரி அல் நபி கேட்டுக்கொண்டுள்ளார். ஜன்னல்களுக்கு அருகில் அல்லது பால்கனிகளில் இருக்கைகள், மேசைகள் போன்றவற்றை வைக்க வேண்டாம். இதனால் குழந்தைகள் அவற்றின் மீதேறி கீழே விழும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார்.