UAE Tamil Web

ஷார்ஜா: குடியிருப்பு பகுதிகளில் தங்கியிருந்த 3,936-க்கும் மேற்பட்ட பேச்சுலர்கள், தொழிலாளர்களை அதிரடியாக அப்புறப்படுத்திய அதிகாரிகள்

sharjah

ஷார்ஜாவின் குடியிருப்பு பகுதியில் உள்ள 185 வீடுகளிலிருந்து 3,936 பேச்சுலர்கள் மற்றும் தொழிலாளர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர்.

- Advertisment -

அல் காதிசியா பகுதியிலிருந்து பேச்சுலர்கள்,தொழிலாளர்களை வெளியேற்றும் ஷார்ஜா ஆட்சியாளரும் உச்ச சபையின் உறுப்பினருமான டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமியின் உத்தரவை செயல்படுத்துவதில், ஷார்ஜா அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அல் காதிசியாவிலிருந்து ஏன் பேச்சுலர்கள் மற்றும் தொழிலாளர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டது என்பதை இங்கே கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

தொழிலாளர்கள் மற்றும் பேச்சுலர்கள் குடியிருப்பு சுற்றுப்புறங்களிலிருந்து வெளியேற வேண்டும் என்ற இந்த முடிவு அல் காதிசியாவிற்கு மட்டுமல்ல, ஷார்ஜாவில் உள்ள குடும்பங்களுக்கான அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியது என்று ஷார்ஜா நகராட்சியின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

ஷார்ஜா நகராட்சியின் பொது இயக்குனரான தபிட் அல் துராஃபி கூறுகையில், “ஷார்ஜா காவல் அதிகாரிகள் மற்றும் ஷார்ஜா மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு ஆணையம் ஆகியவற்றுடன் சேர்ந்து ஆண்களை வெளியேற்றும் முடிவு முழுமையாகவும் விரைவாகவும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக நகராட்சி ஆய்வாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். உத்தரவு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து 1,514 ஆய்வுகள் நடத்தப்பட்டு 185 வீடுகளிலிருந்து 3,936-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பேச்சுலர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்”என்றார்.

மேலும் பேசிய அவர், “தங்களுக்கு சம்பந்தப்படாத பகுதிகளில் வசிக்கும் பேச்சுலர்கள்,தொழிலாளர்கள் அந்த பகுதியில் வசிக்கும் குடும்பங்களின் பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக உள்ளனர். அதுவும் தொற்று காலத்தில் கூட சுகாதாரமற்ற சூழ்நிலையில் குழுக்களாக இவர்கள் வாழும் போது, தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாத காரணத்தால் சிக்கல் அதிகரிக்கிறது. குடியிருப்பாளர்களால் செய்யப்பட்டுள்ள பல மீறல்களைக் கண்டறிந்த பின், 79 வீடுகளுக்கான சேவைகளை நகராட்சி துண்டித்துள்ளது. வீட்டுவசதி விதிகளை மீறியுள்ள காரணத்திற்காக, சேவைகளை துண்டிக்க 169 நோட்டீஸ்களும் நகராட்சி வெளியிட்டுள்ளதாக கூறினார்.

ஷார்ஜாவில் வாழும் குடும்பங்களுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதை பற்றி பேசிய ஷார்ஜா போலீஸ் தலைமை கமாண்டர் மேஜர் ஜெனரல் சைஃப் அல் சிரி அல் ஷம்ஸி, ஆய்வுக் குழுக்களுக்கு முழு ஆதரவையும் வழங்குவதாக கூறினார். அல் காதிசியா பகுதியில் முழு ஆய்வையும் முடித்த பின், அல் நசிரியா, மேசலூன், அல் ஃபாயா பகுதிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.